இப்படியும் நடந்ததா? – நள்ளிரவில் வீட்டின் மீது விழுந்த கற்கள்; பில்லி சூனியமா? விலகாத மர்மம்!

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

ஜூன் 11, 1682ல் நடைபெற்ற சம்பவம் இது. அமெரிக்காவிலுள்ள நியூ ஹாம்ப்ஷயர் என்ற பகுதியில் மதுக்கடை (Tavern) வைத்து நடத்தி வந்தார் ஜார்ஜ் வால்டன் என்பவர். அதே இடத்தில் அவருக்குச் சொந்தமான வீடு, தோட்டம் எனப் பலவற்றையும் வைத்திருந்த செல்வந்தராக அவர் இருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விருந்து, இசை, பிற கேளிக்கைகள் என்று தன் உறவினரோடு நேரத்தைக் கழித்தார். இரவு ஆனதும் கொண்டாட்டங்கள் முடிந்து அவரது குடும்பமே புழங்கத் தொடங்கியது.

வீடு

ஆனால் பாதி தூக்கத்தில் வீட்டிலிருந்த அனைவரும் திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்கள். அந்த வீட்டின் மேற்கூரையின்மீது சடசடவென பெரிய கற்கள் விழுவது போன்ற ஓசை கேட்டது. அதுவும் எல்லா திசைகளிலிருந்தும் அந்தக் கல் மழை பொழிந்தது போல இருந்தது. கூடவே சில செங்கற்கள், கடப்பாரை, உளி ஆகியவையும் விழுந்தன.

‘யார் இந்தச் செயலை செய்தது? அதுவும் நள்ளிரவில்?’ – பயம் ஏற்பட்டாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு வால்டன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். ஆனால் எல்லாத் திசைகளிலும் அவர் தன் பார்வையை ஓட்டினாலும் எந்த மனிதனும் அவர் கண்ணுக்குத் தென்படவில்லை. ஆனால் கற்கள் அப்போதும் தொடர்ந்து வீட்டின் மீது விழுந்து கொண்டே இருந்தன.

மீண்டும் உள்ளே சென்றவுடன் இதை தன் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்களால் நம்பவே முடியவில்லை. வெளியே வந்து பார்த்தார்கள். எங்கோ வெற்றிடத்திலிருந்துதான் அந்த கற்கள் வீசப்படுவது போலத் தோற்றமளித்தன. சிறிது நேரம் கழித்து அந்த கல்வீச்சு தானாகவே நின்றது.

அன்று மட்டுமல்ல, அதற்குப் பிறகும் கூட அவ்வப்போது இதே போன்ற கல்வீச்சு நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கின. இரவில்தான் என்று இல்லை, பகலில் கூட!

பில்லி சூனியம்

தன் பக்கத்து வீட்டுக்காரர் மீது சந்தேகம் கொண்டார் வால்டர். அவர் ஒரு ​சூனியக்காரர் என்ற முடிவெடுத்தார். ஆனால் அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல் எதுவும் கிடைக்கவில்லை. இரு​நூறு ஏக்கர் நிலம், பெரும் பண்ணை என்ற செல்வம் படைத்திருந்த வால்டன் மீது யாராவது பொறாமைப்பட்டு சதிச் செயல்களில் ஈடுபட்டார்களோ என்றும் சந்தேகிக்கப்பட்டது.

பில்லி சூனியம் என்பது போல் ஏதாவது இருக்குமோ என்ற பயமும் ஏற்பட்டது. வால்டன் குடும்பத்தினர் பீதியடைந்தனர். அந்தத் தெருவில் வசிக்கும் வேறு பலரும் கூட இந்த கல்வீச்சுகளைப் பார்த்துப் பிரமித்துப் போனார்கள். எனவே இதை வால்டன் குடும்பத்தினரின் மனப் பிரமை என்று ஒதுக்க முடியவில்லை.

அந்தப் பகுதியின் மேயரான ரிச்சர்ட் என்பவரும் வால்டனின் வீட்டுக்கு நேரடியாக வந்து பார்த்தார். அவரும் அந்தக் கல்வீச்சைக் கண்டார். இது ஒருவேளை சதி வேலையாக இருக்குமோ என்று தீவிர விசாரணை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். காட்டன் மேதர் என்ற நீதிபதியின் தலைமையில் நடைபெற்ற அந்த விசாரணைக் குழு எந்த முடிவுக்கும் வராமல் ‘இது ஏதோ மனிதர்களை மீறிய சக்தி’ என்று அறிவித்தது. ​மூன்று மாதங்களுக்குப் பிறகு கல்வீச்சு ஒருவழியாக நின்றது.

அதற்கும் ஒரு வருடம் கழித்து கலிபோர்னியாவில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு ஒரு வீட்டின் மீது கூழாங்கற்கள் கொட்டித் தீர்த்தன. அந்தப் பகுதியின் ஷெரிப் ஒரு முழுநீள விசாரணைக்கு உத்தரவிட்டும் இதன் பின்னணியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

காட்டன் மேதர்

இதுபோன்று வீசப்படும் கற்கள் மிகவும் வெதுவெதுப்பாக இருந்தன. `ஒருவேளை ஏதாவது எரிகல் வெடித்து வானத்திலிருந்து விழுந்ததா, அல்லது சற்றுத் தள்ளி எங்காவது கல்குவாரியில் கற்கள் உடைக்கப்பட்டு அவற்றின் ஒரு பகுதி விசையுடன் இடம்மாறி விழுந்ததா?’ – இப்படியான சந்தேகங்கள் எழுந்தாலும் அவை நிரூபிக்கப்படவில்லை.

உண்மை என்ன?

இது குறித்து முன்னுக்குப் பின் முரணான சில விவரங்களும் கூறப்பட்டன. சம்பந்தப்பட்டவர்கள் யாருமே இந்தக் கல்வீச்சால் பாதிக்கப்படவில்லை, அதாவது காயப்படவில்லை என்று ஒரு தகவலும், அதற்கு முரணாக ஜார்ஜ் இறக்கும்போது அவரைக் கற்கள் தாக்கியதற்கான காயங்கள் இருந்ததாக ஒரு தகவலும் உலா வருகின்றது. ஆனால், இறுதி வரை மர்மம் தொடர்ந்தது.

ஒரு சிலர், ஜார்ஜுக்குச் சொந்தமான இடம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கியிருந்ததாகவும், அவரின் மதுக்கடை வாடிக்கையாளர்கள் நிறையப் பேர் அவரிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். அதனால், அவருக்கு எதிரிகள் அதிகம் என்பதால், அவர்களின் சதிவலையாக இது இருக்கலாம் என்ற கருத்தும் இருந்தது.

மதுக்கடை (Tavern)

எது எப்படியோ, அமெரிக்காவில் முதன் முதலில் பில்லி, சூனியம் போன்றவற்றைக் குறித்து மக்களைப் பேச வைத்த பெருமை இந்தச் சம்பவத்தையே சாரும் என்கிறார்கள். ஒருவேளை அப்போது அறிவியல் ரீதியாகவோ அல்லது பகுத்தறிவுடனோ சிந்தித்திருந்தால் இதன் உண்மை அப்போதே கண்டறியப்பட்டிருக்கும் என்பதும் ஒரு சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

1698-ல் நியூ ஹாம்ப்ஷயரின் ஆளுநராக இருந்த ரிச்சர்ட் சேம்பர்லேன் இந்தச் சம்பவத்தைத் தொகுத்து `லித்தோபேலியா’ (Lithobalia) என்ற பெயரில் 7000 வார்த்தைகள் கொண்ட கதையாக வெளியிட்டார். போஸ்டனைச் சேர்ந்த அமைச்சராக இருந்த இன்க்ரீஸ் மேத்தர் என்பவரும் தனது புத்தகமான `Illustrious Providences’-ல் இந்தச் சம்பவம் குறித்து எழுதியிருக்கிறார்.

– மர்ம சரித்திரம் தொடரும்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.