சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ரேவேந்திரன் (37) என்பவரும், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி (32) என்ற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டது.
ஆனால் திருமணத்துக்கு முன்பே மணமகன் வீட்டாரிடம் மணமகள் செல்வி, தனக்கு 5 பவுன் நகை, மொபட் மற்றும் ரூ.1 லட்சம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் இவர்களின் திருமண முடிவு ரத்து செய்யப்பட்டது.
திருமணம் நின்றுபோனதால் விரக்தியடைந்த செல்வி, அவ்வப்போது தனது காதலன் ரேவேந்திரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்தார். அந்த வகையில் வழக்கம்போல் காதலன் வீட்டுக்கு செல்வி சென்றார். அங்கு ரேவேந்திரன் இல்லாததால் அவரது பெற்றோரிடம் சண்டையிட்டார்.
அப்போது தகாதவார்த்தைகளில் பேசி அவர்களை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் ரேவேந்திரனின் தாயார் ரேணுகா, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக திருவொற்றியூர் போலீஸ் நிலைய ஏட்டு சரவணன் அங்கு விசாரணைக்கு சென்றார்.
ரேவேந்திரன் பெற்றோரிடம் தகராறு செய்த செல்வியை தடுக்க முயன்றார். ஆனால் செல்வி தொடர்ந்து தகராறு செய்யவே அதனை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வி, போலீஸ்காரர் சரவணனின் வலது கையை கடித்தார்.
மேலும் அவரது சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன், திருவொற்றியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸார் செல்வியை அழைத்து சென்றனர்.
அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அத்துமீறி உள்ளே நுழைதல், தகாத வார்த்தைகளில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
newstm.in