கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விக்ராந்த் போர்க்கப்பல் இன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
நமது நாட்டின் பாதுகாப்புத் துறையில் கப்பற்படை மிக முகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனாலும் சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவின் போர்க்கப்பல்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு.
இந்திய கப்பற்படையில் விக்ராந்த் போர்க்கப்பல் பிரபலமானது. 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக ம்க முக்கியப் பங்காற்றியது விக்ராந்த் போர்க்கப்பல். 1997-ம் ஆண்டு விக்ராந்த் போர்க்கப்பல் சேவை நிறைவடைந்தது. தற்போது அதே விக்ராந்த் பெயரில் உள்நாட்டிலேயே பிரம்மாண்டமான போர்க்கப்பலை நாம் தயாரித்துள்ளோம்.
கொச்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டுக்கு பிரதமர் மோடியால் அர்ப்பணிக்கப்பட உள்ளது. விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள் பிரம்மாண்டமானதாக மிரட்டக் கூடியதாக இருக்கின்றன.
உள்நாட்டு தயாரிப்பு
விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள்: இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல்கட்டும் தளம் ஆகியவை உள்நாட்டிலேயே வடிவமைத்து 76% உள்நாட்டு பாகங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் (மேன் இன் இந்தியா) என்ற நாட்டின் முன்முயற்சிக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
பிரம்மாண்டம்
விக்ராந்த் போர்க்கப்பலானது ஒரு சிறிய மிதக்கும் நகரமாக காட்சியளிக்கிறது. இரு கால்பந்து மைதானங்களின் அளவுக்கு அல்லது இரண்டரை ஹாக்கி மைதாங்கள் அளவுக்கு விமானங்களை நிறுத்தும் இடம் கொண்டது. மொத்தம் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் மற்றும் 59 மீட்டர் உயரத்துடன் விக்ராந்த் கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2000 கிலோமீட்டர்கள் நீள கேபிள்கள், 120 கிலோமீட்டர்கள் நீள பைப்புகள்; 2300 அறைகள் உள்ள பிரம்மாண்ட போர்க்கப்பல் இது.
12 போர் விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள்
விக்ராந்த் போர்க் கப்பலில் சுமார் 1,700 வீரர், வீராங்கனைகள் பணியாற்ற உள்ளனர். இதில் ஒரே நேரத்தில் 12 போர் விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களை விக்ராந்த் கப்பலில் இருந்து இயக்க முடியும். விக்ராந்த் கப்பல் கட்டும் பணியின் மூலம், கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் 2000-க்கும் மேற்பட்டோருக்கும், உதிரிபாகத் தொழிற்சாலைகளில் சுமார் 12,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது.
40,000 டன் எடை
நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலான இந்த விமானம் தாங்கி கப்பல் 40,000 டன் எடை கொண்டதாகும். உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 21,500 டன்கள் சிறப்பு ரக எஃகு இந்திய போர் கப்பல்களிலேயே முதல்முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்ராந்த போர்க்கப்பலுக்கான கட்டுமானத்துக்கு செலவு ரூ.20,000 கோடி
கடல் ஒத்திகைகள்
உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பல் இறுதி கட்ட கடல் ஒத்திகையை ஜுலை10-ந் தேதி நடைபெற்றது. அப்போது பல்வேறு சாதனங்கள் மற்றும் விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட நடைமுறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
விக்ராந்த் போர்க் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை ஆகஸ்ட் 2021-ல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகைகள் அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 2022-ல் நடத்தப்பட்டன.
நாட்டுக்கு அர்ப்பணிப்பு
கொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விமானந் தாங்கி போர்க்கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்திய விமானப் படையின் 4-வது விமானந்தாங்கி கப்பல் இது. நாட்டின் தற்போது ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பல் மட்டுமே சேவையில் உள்ளது.