அமராவதி: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென தீப்பிடித்ததால் 300 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னூலில் இருந்து உளவுபாடு நோக்கி LPG சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி பிரகாசம் மாவட்டம் பெத்தவாலா என்ற இடத்தில வந்தபோது லாரியின் எஞ்ஜினில் தீவிபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த லாரி டிரைவர் வாகனத்தில் இருந்து குதித்து உயிர்தப்பினார். ஆனால் சில நிமிடங்களில் லாரி முழுவதும் தீ பரவியது. இதில் லாரியில் இருந்த 100-கணக்கான LPG சிலிண்டர்கள் பலத்த சத்தத்துடன் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெடித்து சிதறின.
லாரியில் 300-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். லாரி தீப்பிடித்து கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் என்ன நடந்ததென்று புரியாமல் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடையந்தனர். சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்த நிலையில், இதிலிருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு போலீசார் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரி மின்சார வயர்களில் மோதியதில் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.