அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் முதல் முறை ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இரண்டாவது முறை எடப்பாடி பழனிசாமிக்கும் சாதகமாக தீர்ப்புகள் வந்துள்ளன. இதை இரு தரப்பின் ஆதரவாளர்களும் சிறப்பாக கொண்டாடி தீர்த்துள்ளனர். கொண்டாட்டம் என்றாலே இனிப்புகள் தான் முதலில் நினைவுக்கு வரும். அப்படியே கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டு, பிறருக்கும் கொடுத்து மகிழ்வதில் தான் எத்தனை சந்தோஷம். தமிழகத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதில் பிரதானமான இனிப்பாக லட்டு தான் முன்வந்து நிற்கிறது.
தலைவர்களின் பிறந்த நாள் ஆகட்டும், தேர்தல் வெற்றி ஆகட்டும், நீதிமன்ற தீர்ப்புகள் ஆகட்டும். எல்லாவற்றிற்கும் லட்டுகள் வாங்கி பிறருக்கு கொடுத்து மகிழ்கின்றனர். குறிப்பாக லட்டு என்பது லட்சுமிக்கு பிடித்தமான உணவு என்று சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில் அதிமுகவிற்குள் நடக்கும் ஒற்றை தலைமைக்கான போட்டியில் லட்டு விற்பனை அமோகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுவும் வெறுமனே சென்னையுடன் கொண்டாட்டங்கள் முடிந்தவிடவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் வேர் பரப்பி கிளை விரித்து செயல்பட்டு வரும் அதிமுகவில்
,
ஆகிய இருவருக்கும் தனித்தனியே ஆதரவு வட்டம் இருக்கிறது. இவர்கள் மாவட்டம், வட்டம், ஒன்றியம், ஊராட்சி வரை தங்களது மகிழ்ச்சியை லட்டுகள் வாங்கி பிறருக்கு கொடுத்து கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கு தான் பெரும்பான்மையான ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தான் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி தனது ஆதரவாளர்கள் துணையுடன் தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வைத்தார்.
அதன்பிறகு தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யவும் வைத்து விட்டார். இன்னும் ஒரேவொரு விஷயம் தான் மிச்சம். மீண்டும் ஒரு பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவது மட்டும் தான். அதற்கான சாதகமான சூழலை எதிர்நோக்கி எடப்பாடி தரப்பு காத்திருக்கிறது.
பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்; இபிஎஸ் தயாரா? ஓபிஎஸ் சவால்!
இந்த சூழலில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் தொடங்கி ஊராட்சிகள் வரை அதிமுகவின் எடப்பாடி ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களது கைகளில் பிரதானமாக காணப்படுவது சில்வர் தட்டும், தட்டு நிறைய லட்டுகளும் தான். இது ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருசில இடங்களில் லட்டுகள் தீர்ந்து விட்டதால் ஜிலேபி வாங்கி வந்து பிரியமானவர்களுக்கு ஊட்டி, பொதுமக்களுக்கு அள்ளிக் கொடுத்து எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக அதிமுக ரத்தத்தின் ரத்தங்களால் லட்டு பிஸினஸ் சூப்பர்…!