காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய புதிய தொழில்கள், புதிய புதிய போட்டியாளர்கள், புதிய புதிய நெருக்கடிகள் என தொழில்முனைவோர்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘ரோலர் கோஸ்டர் ரைட்’ மாதிரிதான் இருக்கிறது. பல நிறுவனங்கள் போட்டி, பொறாமையால் காணாமல் போயிருக்கின்றன.
அதே சமயம், குடும்பத் தொழில் நிறுவனங்கள் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சளைக்காமல் எதிர்கொண்டு பல தசாப்தங்கள் தாண்டியும் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், குடும்பத் தொழில் நிறுவனங்களின் எதிர்காலம் என்பது குறித்து மாபெரும் கருத்தரங்கை சி.ஐ.ஐ அமைப்பு சென்னையில் இந்த மாதம் செப்டரம்பர் 16, 17 தேதிகளில் நடத்த உள்ளது.
இது தொடர்பாக வியாழக்கிழமை அன்று பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார் சி.ஐ.ஐ அமைப்பின் கெளரவத் தலைவரும் டி.வி.எஸ் சப்ளை செயின் சொல்யூசன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக செயல் தலைவருமான ஆர்.தினேஷ்.
”உலக அளவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 90 சதவிகிதத்துக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் குடும்ப நிறுவனங்களாகவே உள்ளன. இந்த நிறுவனங்கள் உலக ஜி.டி.பி.யில் 70% பங்களிப்பை வழங்குவதாக இருக்கின்றன. ஆனாலும், குடும்ப நிறுவனங்கள் பலவும் மூன்றாம் தலைமுறைக்குமேல் சோபிக்கவில்லை என்ற கருத்தாக்கமும் உள்ளது. பல நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள் கைகளுக்கு மாறி உள்ளன.
இப்படி பல்வேறு விஷயங்களையும் முன்வைத்து CII – FBN India Family Business Summit என்ற தலைப்பில் எதிர்காலத்தில் குடும்ப நிறுவனங்கள் என்பதை மையமாகக் கொண்டு இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.
இந்தக் கருத்தரங்கில் நூற்றாண்டுகளாக நீடிக்கும் குடும்ப நிறுவனங்கள் முதல், நேற்று முளைத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை அலசி ஆராயப்பட உள்ளன. பி.டபிள்யு.சி (PWC) நடத்திய சர்வேயின் அடிப்படையில் பல்வேறு புள்ளிவிவரங்கள், அறிக்கைகளுடன் இந்தக் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், முன்னணிக் குடும்ப நிறுவனங்களின் தலைவர்கள், அந்த நிறுவனங்கள் புதிய தலைமுறை தொழில்முனைவோர்கள் ஆகியோரும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் மேடையாகவும் இது இருக்கும்.
அமெரிக்கா, ஜப்பான், துபாய், சிங்கப்பூர் ஆகிய பல்வேறு நாடுகளிலிருந்து 200-க்கும் மேலான தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தக் கருத்தரங்கை சஞ்சிவ் பஜாஜ் தொடங்கி வைக்க இருக்கிறார்” என்றார்.
இந்தக் கருத்தரங்கை சி.ஐ.ஐ அமைப்பின் கெளரவத் தலைவர் ஆர். தினேஷ் மற்றும் எக்கி வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இணை சிஇஓ-வும், சி.ஐ.ஐ நெக்ஸ்ட் ஜென் சேப்டர் தலைவரும் ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.