தேனி மாவட்டம், நாராயணத்தேவன்பட்டியில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றது. அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் சுருளி அருவி சாலையில் அரசு வங்கி, தனியார் தொடக்கப்பள்ளி, சர்ச் மற்றும் சாலையோரத்தில் வீடுகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில், இன்று அதிகாலை அப்பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, தீடீரென்று டமார் என்று சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு உறங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து பார்த்தபோது சிலர் அலறிக்கொண்டே ஓடியுள்ளனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டு அப்பகுதியினர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். பின்னர், இது குறித்து ராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அப்போது, வீட்டுக் கதவு, ஜன்னல், பூஜை அறை, சாக்கடை, சர்ச் வாசல் ஆகிய இடங்களில் 6 வெடிகுண்டுகள் வெடித்துக் கிடந்தது. காவல்துறையினர், அதனை ஆய்வு செய்த போது அது நாட்டு வெடிகுண்டுகள் என்று தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, துப்பறியும் மோப்பநாய் மோப்பம் பிடித்து காமயகவுண்டன்பட்டி சாலை வழியாக சென்றது. இதனையடுத்து, தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியில் இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மேலும், திருமண விழாவில் பிளக்ஸ் போர்டு வைத்ததிலும் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.