தேனி: வைகை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வருக்கம் தண்ணீர் முழுவதுமாக வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 4,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று வினாடிக்கு 3,293 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைபெய்து வருவதால் 2வது நாளாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
பாதுகாப்பு கருதி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கரையோரங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றின் குறுகிற் உள்ள தரைப்பாலம் மற்றும் வடகரை, தென்கரை சாலைகள் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த சாலைகள் வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கோரிப்பாளையம், சிம்மக்கல், தமுக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 190 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், ஆற்றங்கரையோரங்களில் 27 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.