பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டியை நடனமாட வற்புறுத்திய சமூக சேவகி – வலுக்கும் கண்டனம்

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு வயதான மூதாட்டியை கட்டாயப்படுத்தி நடனமாட வைப்பதா எனப் பலரும் சமூக சேவகிக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காகவும், நூற்றுக்கணக்கான உள்நாட்டு நெல் ரகங்களைப் பாதுகாத்ததற்காகவும் கடந்த 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கமலா பூஜாரி. 72 வயதான இவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கமலா பூஜாரி தற்போது உடல்நலம் தேறி வரும் நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வரும் திங்கட்கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவிருக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அவரை சந்தித்த சமூக சேவகி மம்தா பெஹரா என்பவர் கமலா பூஜாரியை தன்னுடன் நடனமாட வைத்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு வயதான மூதாட்டியை கட்டாயப்படுத்தி நடனமாட வைப்பதா எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக கமலா பூஜாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை; ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன், ஆனால் அவர் (மம்தா பெஹெரா) கேட்கவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்தேன்” என்றார்.

image
இதையடுத்து கமலா பூஜாரியை மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி நடனமாட வைத்த சமூக சேவகி மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசாவில் உள்ள பரஜா பழங்குடி சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக சேவகி மம்தா பெஹரா விளக்கமளிக்கையில், இந்த செயலுக்குப் பின்னால் தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்றும் பூஜாரியின் சோம்பலைத் தவிர்க்கவே அவ்வாறு நடனமாட வைத்ததாகவும் கூறினார்.

இதனிடையே கமலா பூஜாரி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஹரியானா: முதல்வருக்கு நெருக்கமான பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை – துணிக்கடையில் பயங்கரம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.