போபால்: மத்தியப் பிரதேசம் சாகர் நகரில் மர்ம நபர் ஒருவர், தூங்கும் காவலாளிகளை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து வருகிறார்.
கடந்த 2 நாட்களில் உத்தம் ராஜக், கல்யாண் லோதி, சம்பூரம் துபே ஆகிய 3 காவலாளிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மங்கள் அகிர்வர் என்ற காவலாளி தாக்கப்படும் போது கண்விழித்ததால் மண்டை உடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுத்தியல், கல், சம்பட்டியின் மர கைப்பிடி ஆகியவற்றால் காவலாளிகளை மர்ம நபர் தலையில் தாக்கி கொலை செய்வது போல் தெரிகிறது. ஒரு காவலாளியின் அருகில் இரத்தக் கறையுடன் பாறாங்கல் இருந்தது.
இந்த தொடர் கொலை சம்பவம், மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச டிஜிபி சுதிர் சக்சேனா கூறுகையில், “கொலையாளியை பிடிக்க சிறப்பு படை உருவாக்கப் பட்டுள்ளது. போலீஸார் ஆயுதங் களுடன் முக்கிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் இது போல் ஏற்கெனவே ஆதேஷ் கம்ரா என்பவர் லாரி டிரைவர்களை குறிவைத்து கொலை செய்து வந்தார். இவர் மொத்தம் 34 பேரை கொலை செய்தார். இது நாட்டின் மிக மோசமான தொடர் கொலை சம்பவமாக இருந்தது. அவரும் இரவில் தெருக்களில் நடமாடுவார். யாரையாவது பார்த்தால் சிரிப்பார். இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு நபருக்கு உதவ வந்ததாக கூறுவார். மறுநாள் அப்பகுதியில் ஏதாவது கொலை சம்பவம் நடந்திருக்கும். அவர் 2018-ம் ஆண்டு பிடிபட்டார்.
ஆனால் சாகர் நகரில் நடைபெறும் கொலை சற்று வித்தியாசமாக உள்ளது. துபே என்ற கொலையாளி கொல்லப்பட்ட இடத்தில், சிம் கார்டு இல்லாமல் ஒரு செல்போன் கிடந்தது. அது முதல் நாள் கொலை செய்யப்பட்ட லோதி என்ற காவலாளியின் செல்போன் என தெரிய வந்துள்ளது.
மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருடன் சாகர் எஸ்பி தரூண் நாயக் விசாரணை நடத்தினார். தாக்கிய நபர் வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்ட்டும் போட்டிருந்ததாக அவர் கூறினார்.
மக்கள் பயப்படுவதுபோல், இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் சைகோ கொலையாளி, யாரும் இருக்க வாய்ப்பில்லை. காவலாளி கொல்லப்பட்ட ஒரு சம்பவம் சாகர் நகரில் கடந்த மே மாதம் நடந்துள்ளது. அதற்கும், இந்த கொலை சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை என கூறும் எஸ்.பி. தரூண் நயாக், குற்ற வாளியை கண்டுபிடிக்க அனைத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.