மும்பை: இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
அத்வைத் சந்தன் இயக்கிய இந்தப் படத்தில் கரீனா கபூர், நாக சைத்தன்யா ஆகியோரும் நடித்திருந்தனர்.
திரைத்துறையினர் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லால் சிங் சத்தா படம் பாய்காட் பிரச்சினையால் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
அதிகம் நம்பிய அமீர் கான்
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் டாப் ஸ்டாராக வலம் வரும் அமீர்கான், தனது படங்களில் புதுமையான முயற்சிகளை செய்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் உருவான ‘லால் சிங் சத்தா’, ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற ‘ஃபார்ஸ்ட் கம்ப்’ படத்தின் இந்தி ரீமேக்காக வெளியானது. அத்வைத் சந்தன் இயக்கியிருந்த லால் சிங் சத்தா, இந்தி தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியானது. அதனால், ‘லால் சிங் சத்தா’ மிகப் பெரிய ஹிட் கொடுக்கும் என அமீர் கான் உறுதியாக நம்பினார்.
பாய்காட் செய்த நெட்டிசன்கள்
‘லால் சிங் சத்தா’ படத்தில் அமீர் கானுடன் கத்ரீனா கபூர், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகும் முன்னர் இந்தியா முழுவதும் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அமீர் கான் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு எதிராக நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கினர். மேலும், லால் சிங் சத்தா படத்துக்கு எதிராகவும் பாய்காட் பிரசாரத்தை முன்னெடுத்தனர். இதனால், இந்தப் படம் வெளியாகும் முன்னரே சர்ச்சையில் சிக்கியது.
தோல்வியை சந்தித்த லால் சிங் சத்தா
இருப்பினும் ‘லால் சிங் சத்தா’ படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என அமீர் கான் நம்பியிருந்தார். ஆனால், தொடர்ந்து படத்துக்கு எதிரான பாய்காட் பிரசாரம் தீவிரமானதால், படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அமீர் கானுக்கு மிக மோசமான ஓப்பனிங் கொடுத்த திரைப்படமாக லால் சிங் சத்தா அமைந்தது. இதனால், அமீர் கான் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் ரொம்பவே ஏமாற்றம் அடைந்தனர்.
சம்பளத்தை மறுத்த அமீர் கான்
திரையரங்குகளில் முதல் 2 வாரங்கள் வரை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போன லால் சிங் சத்தா, மொத்தமாக 60 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்திடம் தனது சம்பளத்தை வாங்க மறுத்துள்ளாராம் அமீர் கான். லால் சிங் படத்தால் சுமார் 100 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அமீர் கான் தனது சம்பளத்தை வாங்க மறுத்துள்ளது, இந்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.