சென்னை: தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி மாணவர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 4-ம் தேதி தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த படங்கள், நெடுந்தொடர் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசு ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தமிகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 04.09.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் விழாவில் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் 2008, 2009 ஆம் கல்வியாண்டு முதல் 2014 ஆம் கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் தயாரித்த சிறந்த குறும்படங்களில் பணியாற்றிய சிறந்த இயக்குநர்கள், சிறந்த ஒளிப்பதிவாளர்கள், சிறந்த ஒலிப்பதி வாளர்கள், சிறந்த படத்தொகுப்பாளர்கள் மற்றும் சிறந்த படம் பதனிடுவர்கள் என 30 பேருக்குத் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 1,50,000/- காசோலையும், 1 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.
இந்த விருதுகள் வழங்கும் விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூபாய் 1 இலட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம், சிறந்த படம் சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் எ 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ. 26,25,000/ (இருபத்தாறு இலட்சத்து இருபதைந்தாயிரம் மட்டும்) காசோலையும், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 இலட்சம் என 20 பேருக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் திருக்கரங்களால் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நெடுந்தொடர் களின் தயாரிப்பாளர்கள், திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 314 பேருக்கு ரூ.52 இலட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலையும் விருதாளர்களின் பெயர் பொறித்தத் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன எனவும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டு அறிவித்துள்ளது.