தேனி: “அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, சென்னையில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அம்மன் பி.வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவும், ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கேவியட் மனுக்களையும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.