உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 20,000 கோடி ரூபாய் செலவில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், “இந்தியாவின் பாதுகாப்புத் துறையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்பதற்கு ஐ.என்.எஸ் விக்ராந்த் ஒரு உதாரணம். கேரள கடற்கரையில் ஒரு புதிய எதிர்காலத்தின் சூரிய உதயத்தை ஒவ்வொரு இந்தியர்களும் இன்று காண்கின்றனர். விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் அல்ல. அது பரந்த, அகலமான, சிறப்புமிக்க 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கடின உழைப்பு, திறன், செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.
இந்தியாவின் மன உறுதியை வலுப்படுத்தும் விதமாக இந்த விழா அமைந்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெரிய விமானம் தாங்கி கப்பலை உருவாக்கக்கூடிய உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இன்று இணைந்துள்ளது. ஐ.என்.எஸ் விக்ராந்த் நாட்டுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. மேக் இன் இந்தியா மட்டுமல்ல, இந்த உலகத்தையே உருவாக்குவதுதான் நம் குறிக்கோள். காலனித்துவத்தின் தடயங்களை அகற்றிய கடற்படையின் புதிய கொடியை சத்ரபதி சிவாஜிக்கு அர்ப்பணிக்கிறேன்.
இந்திய கப்பற்படையின் எல்லா கிளைகளும் பெண்களுக்காக திறந்திருக்கும் வகையில் தற்போது விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படுள்ளன. கடல் அலைகளுக்கு எல்லைகள் இல்லை, அதுபோல இந்தியாவின் புத்திரிகளுக்கும் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது” என பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.