மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 1,400 பேர் படுகாயமடைந்தனர். மும்பையின் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. டைகர் மேமன், யாகூப் மேமன் ஆகிய இருவரும் இத்திட்டத்தை செயல்படுத்தினர்.
இது தொடர்பான வழக்கில் யாகூப் மேமன் உள்ளிட்ட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யாகூப் மேமனின் மரண தண்டனையை 2013-ல் உறுதி செய்தது. மற்ற 10 பேரின் தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 2015-ல் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். ஆனால், தாவூத் மற்றும் டைகர் ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்கள் தவிர மேலும் சிலரை தேடப்படும் குற்றவாளிகளாக என்ஐஏ அறிவித்துள்ளது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராஹிமை கைது செய்வதற்கு உரிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ நேற்று அறிவித்துள்ளது. இதுபோல தாவூதின் நெருங்கிய கூட்டாளியான ஷகீல் ஷேக் (எ) சோட்டா ஷகீல் பற்றிய தகவலுக்கு ரூ.20 லட்சமும், ஹஜி அனீஸ் (எ) அனீஸ் இப்ராஹிம் ஷேக், ஜாவேத் படேல் (எ) ஜாவேத் சிக்னா மற்றும் இப்ராஹிம் முஷ்டாக் அப்துல் ரசாக் மேமன் (எ) டைகர் மேமன் ஆகியோர் பற்றிய தகவலுக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது.
டி கம்பெனி என்ற பெயரில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சர்வதேச அளவில் தீவிரவாத குழுவை நடத்தி வரும் தாவூத் இப்ராஹிமை சர்வதேச தீவிரவாதி என ஐ.நா.சபை அறிவித்துள்ளது. ஆயுத கடத்தல், போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத தாக்குதல் நடத்துதல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, அல்காய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக என்ஐஏ குற்றம் சாட்டி உள்ளது.