வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
இதுவரை வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு பொறுமையாகவும், நிதானமாகவும், வாழ்க்கை எனும் படகை மிக்க கவனத்துடன் ஓட்டி கரை சேர வேண்டிய பருவம் இது. அதற்கு உதவ இதோ சில வழிமுறைகள் :
வாழ்க்கை என்பது ஒரு நெடும் பயணம். அது 30 தில் இருந்ததைப் போல 60 ல் இருக்காது. அதற்கு தகுந்தாற் போல் ஒருவர் தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரேடியாக உடும்பு பிடியாக இருக்க வேண்டாம். மாற்றத்தை ஏற்கவிடில் வாழ்வில் மிஞ்சுவது ஏமாற்றமே!
நோய்களைச் சமமாக பாவித்தல்
உடலுக்கு ஏதாவது தொல் லகள் வந்துவிட்டால், உடனே எனக்கு இப்படி நோய்கள் ஏன் வந்தது என்று ஊரைக் கூட்டி அழுதுவிட்டு, எந்த ஒரு மருத்துவரிடமும் முழு நம்பிக்கை வைக்காமல் யார், யார் என்ன எல்லாம் சொல்கிறார்களோ, அவர்களின் பேச்சைக் கேட்டு, பல மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, தன் நோயைப் பற்றியே பெரிதாக நினைத்துக் கொண்டு உடலை அலட்டிக்கொள்ளவும் வேண்டாம். அதே சமயத்தில், இந்த நோய் என்னை என்ன செய்துவிடும், வயதானால் இதெல்லாம் வருவது சகஜம் தான் என்று நோயை ஒரேடியாக அலட்சியப்படுத்தவும் கூடாது. நோய்கள் வராமல் இருந்தால் நல்லது, வந்துவிட்டால் அதற்கு தக்க சிகிச்சை எடுத்தால் போச்சு என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புலம்புவதைத் தவிர்த்தல்
“நான் என்ன பாவம் செய்தேனோ எனக்கு ஏன் இந்த கஷ்டம் என்றோ அல்லது நான் மனதறிந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லையே, எனக்கு ஏன் இந்த கொடுமை” என்று மற்றவர்களிடம் புலம்புவதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுக்கும் உங்களைப் போல சில பிரச்சனைகள் உண்டு என்பதை மனதில் கொள்ளுங்கள். பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாருமில்லை.
அளந்து பேசுங்கள்
வீட்டுக்கு வருவோரிடம் உங்கள் புராணத்தை முதலில் அவிழ்த்து விட வேண்டாம். வீட்டுக்கு வந்தவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அது அவர்களை உற்சாகப்படுத்தி உங்களை அடிக்கடி காண வரச் செய்யும். உறவுகள், நட்புகளுக்கிடையே பேச்சு என்பது பகிர்ந்துகொள்ளல்தான்; நீங்கள் மட்டுமே பேசினால் அது சொற்பொழிவு ஆகிவிடும்.
சொந்தக்காலில் நிற்கவும்
எனது நண்பர் ஒருவர் என்னிடம் அடிக்கடி “என்னுடைய தேவைகளையெல்லம் என் மனைவியே செய்து விடுவாள். என்ன மருந்து, எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது அவளுக்குத்தான் தெரியும்”, என்று பெருமிதத்துடன் கூறுவார். இது மிகவும் தவறு. நடுத்தர வயதிருந்தே தன் தேவைகளைத் தானே செய்து பழகிக்கொள்ள வேண்டும். சான்றாக, மருந்து சாப்பிடுவது, உடை எடுத்து வைப்பது மற்றும் பல, அன்றாடத் தேவைகளில் ஒருவர் உதவும் பொழுது மிகவும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் திடீரென்று அவருக்கு (கணவன் அல்லது மனவிை) ஏதாவது நேர்ந்து விட்டால் இவரின் நிலைமை என்ன ஆகும்? இதைப் புரிந்து கொண்டாவது உங்களது தேவைகளை நீங்களே செய்துகொள்ள பழகிக்கொள்ளுங்கள். பின்னால் உங்களுக்குச் சிரமம் இருக்காது. இது மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தனியாக வாழும் ஒரு தைரியத்தையும் ஏற்படுத்தும்.
பற்றற்ற வாழ்வு
வயது ஆக ஆக மனதளவில் பந்த, பாசங்களை குறைத்துக்கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். ஒரேடியாக, மனைவி, பிள்ளை, பேரன், பேத்தி என்று பாசத்தைக் கொட்டக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அது முதியவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், கொஞ்சம், கொஞ்சமாக பாச வலையிருந்து மீண்டு, தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீரைப்போல வாழக் கற்றுக்கொள்வது முதியவர்களுக்கு நல்லது. சொல்வது எளிது. அதன்படி செயல்படுவது சற்று கடினம். முயற்சி செய்துதான் பாருங்களேன்!
பிரச்சனை தீர்க்கும் பிராணாயாமம்
பிராணாயாமம் மூலம் ஐம்புலன்களை அடக்கும் வலிமையையும், நீண்ட ஆயுளையும் பெறலாம். முதுமையிலும் மாறாத இளமையுன் இருக்கலாம். பிராணாயாமம் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
திருப்தி தரும் தொண்டு
மற்றவர்களின் பிரச்னைகள்தீர்க்க நீங்கள் உதவும்போது உங்கள் பிரச்சினைகள் தானாகவே குறைகின்றன. தொண்டுஎன்பது உடலால் மட்டும் செய்யக் கூடியது என்ற எண்ணவேண்டாம். “பாவம், அவன்சிரமப்படுகிறானே” என்ற அடுத்தவர்களை மனதில் நினைத்து, அவர்கள் துன்பம் தீர மனதார பிரார்த்தனை செய்யுங்கள். அதுவும் தொண்டுதான்! தொண்டின் மூலம் மனம் லேசாகும், துன்புங்கள் குறையும், இதனால் மனம் திருப்தி அடையும்.
உயில் எழுதிவைத்தல்
முதியவர்கள் தங்கள் கடமைகளை ஓரளவுக்கு நிறைவேற்றிய பிறகு, தங்கள் உடல்நலத்தையும் மனதில் கொண்டு, தாங்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பரம்பரையாகப் பெற்ற சொத்துக்கள் அவர்கள் பெயர்களில் இருக்கும் பட்சத்தில் தன் இறப்பிற்குப் பின் யார் யாருக்கு அது போய்ச் வேரவேண்டும் என்பதைத் தெளிவாக சாட்சிகள் முன்னிலையில் எழுதி வைப்பது மிக அவசியம். இதனால் பின் வரும் கணவன் அல்லது மனைவி மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கிடையே ஏற்படும் மோதல் மற்றும் வழக்கு போன்ற தேவையற்ற தொல்லைகளைத் தவிர்த்து விடலாம். இதைப் போலவே “வாழும் உயில்” மற்றும் “உடல் தானம்” போன்றவற்றிக்கான உயில்களையும் மறவாமல் எழுதி உங்கள் நெருங்கிய குடும்பத்தினருக்க தெரிவிக்க மறக்க வேண்டாம்.
உழைப்பும் ஓய்வும்
சக்திக்கு ஏற்ற உழைப்பும், உழைப்பு ஏற்ற ஓய்வும் முதுமைக் காலத்தில் மிகவும் அவசியம். வேலை, வேலை என்று ஒரேயடியாக மூழ்கிவிட வேண்டாம். பின்னால், அது உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும். முடிந்த அளவுக்கு சுற்றுலா செல்வதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். காரணம், புதிய இடங்களையும், புதிய நபர்களையும் சந்திக்கும்போது மனதுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும்.
உறவும் நட்பும்
உறவுகளை வெட்டிவிட வேண்டாம். ஒட்டிவைத்த உறவு கூட ஒரு சமயத்தில் கை கொடுக்கும். குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று நண்பர்களை உயிருக்கு உயிராக நேசியுங்கள். உறவுகள் கைவிட்ட காலத்தில் நட்புதான் உங்களுக்கு கைகொடுக்கும்.
வீடு
முதுமைக் காலத்தில் வசிக்கப்போகும் இடம், வீடு பற்றி ஆரம்பத்திலேயே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். வயதான காலத்தில் சொந்த வீட்டில் குடுயிருப்பது ஒரு சுகமான அனுபவமே.
சேமிப்பு கட்டாயம்
முதுமைக் காலத்திற்காக ஒரு கட்டாய சேமிப்பு வேண்டும். முதுமையில் பாசத்தைவிட பணத்திற்குத்தான் மதிப்பு அதிகம், ஏனென்றால் பணம் பாதளம் வரை பாயும்! சொத்துக்களை முழுமையாகத் தம் வாரிசுகளுக்கு கொடுத்துவிடக்கூடாது. அவர்கள் மனம் மாற நாமே காரணமாகி விடக்கூடாது. நம் பிடிமானம் அதில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியின் பெயரில் ஒரு சேமிப்பை வங்கியில் போட்டு வைத்திருக்க வேண்டும். அவசர காலத்தில் சொத்து உடனே கைகொடுக்காது. ஆனால் வங்கியில் உள்ள பணம் அவசரத் தேவைக்குக் கைகொடுக்கும்.
தனிமையைத் தவிர்த்தல்
தனிமைத் தவிர்க்கும் பழக்கம் – முதுமையின் விரோதி தனிமை. எப்பாடுபட்டாவது தனிமையைத் தவிர்க்கவேண்டும். முதுமை காலத்திற்காக நல்ல பொழுதுபோக்கு ஒன்றை நடுத்தர வயதிலிருந்தே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற அணிகலன்களைத் தவிர்க்க
முதுமையில் நகை மற்றும் ஆடை ஆபரணங்களில் நாட்டம் வேண்டாம். அதில் பணமும் செலவழிக்க வேண்டாம். சில சமயங்களில் அதிக நகைகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இதற்கு மாறாக உங்களுக்கு என்றும் உதவும் சில அணிகலன்களை தேவைப்பட்டால் உபயோகிக்கத் தயங்கக் கூடாது. அவை கைத்தடி, காது கேட்கும் கருவி, பல்செட் மற்றும் கண்ணாடி.
குடும்பத்தோடு இணையுங்கள்
கூட்டுக்குடும்பம் சிதறுவதற்கு முதியோர்களின் நடைமுறைகளும் ஒரு காரணமாக இருக்கின்றன. இளையதலைமுறையினரின் கஷ்டங்களை முதியோர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னால் அந்தக் குடும்பத்துக்கு எவ்வாறு உதவமுடியும் என்று எண்ண வேண்டும். பேரப்பிள்ளையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அந்தக் குழந்தைக்கு கதை சொல்வது என்று தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்துக்கு உதவ வேண்டும். இவை குடும்பத்தில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும். மகன், மருமகள், பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள்களில் சிறிய பரிசை கொடுத்து அவர்களின் அன்பை நிலைநாட்டலாம். குடும்பப் பிரச்சனைகளில் நீங்களாகவே தலையிட்டு அதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களின் உதவி மற்றவர்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும் என்கிற முறையில் குடும்பத்தில் நடக்க முயலுங்கள்.
அவசர உதவிக்கு
தனித்து வாழும் முதியவர்கள் துாரத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களை நம்பித்தான் வாழ வேண்டியிருக்கும். ஒரே மருத்துவரிடம் முடிந்தவரை சிகிச்சை பெற்று கொள்ளுங்கள். அவசர அழைப்புக்கு உதவும் மருத்துவர், மருந்துக் கடை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ், உறவினர், நண்பர்களின் தொலைபேசி, செல்போன் எண்களை பெரிய எழுத்தில் எழுதி சுலபமாக பார்க்கும் இடத்தில் வைக்கவும்.
மன உறுதி
முடிவாக, எல்லாவற்றை இழந்தாலும், மன உறுதியை மட்டும் இழக்காமல் முதுமைப் பாதையில் முன்னேற வேண்டும். இனியும் கோபதாபங்களுக்கு இங்கு இடம் இல்லை. இது ஒன்று தான் கடைசி துணை. வந்தால் வரட்டும் போடா என்ற மனோ தைரியத்துடன், மற்றவர்களிடம் அன்பாகவும், பணிவாகும் நடந்து கொள்ள வேண்டும். உடல் தளர்ந்து விடலாம் ஆனால் மனதைத் தளரவிடக் கூடாது.
முதுமையின் உண்மைநிலையை அறிய தினமும் இரவில் உறங்குதற்கு முன்பு கீதையில் இருந்து நாம் தெரிந்துக்கொள்ளும் செய்தியை தவறாமல் படியுங்கள். வாழ்க்கை தத்துவம் எளிதில் புரிந்துவிடும்.
நேற்று நடந்தது நன்றாகவே நடந்தது
இன்று நடக்கிறது நன்றாகவே நடக்கிறது
நாளை நடப்பதும் நன்றாகவே நடக்கும்”
– பகவத் கீதை யின் உட்கருத்து
வளமான முதுமையைக் கழிக்க இதை விட வேறு என்ன வழி!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.