தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் நீரில் மிதப்பதால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வடுககுடி, சாத்தனூர், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வாழை மரங்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு விளைநிலத்தில் மிதந்து வருகிறது.
தொடர் கனமழை காரணமாக, தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் ஏக்கருக்கு ஒரு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது,
“கடந்த ஒரு ஆண்டாக பிள்ளையை போல், ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து வளர்த்த வாழை மரங்கள், தொடர் கனமழையால் வேரோடு முற்றிலும் சாய்ந்து, அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி மிதக்கின்றன.
வாழைத் தோட்டங்களில் ஒரு ஆள் மட்டத்திற்கு தண்ணீர் நிற்பதால் மீதமுள்ள வாழை மரங்களும் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு நெற்பயிருக்கு காப்பீடு வழங்குவது போல வாழை மரங்களுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்
மேலும், தமிழக அரசு சத்துணவில் குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை வழங்க வேண்டும். இதனை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்தால், ஒரு வாழைப்பழத்தை ஒரு ரூபாய்க்கு தருவதற்கு தயாராக உள்ளோம்”. என்று அவர்கள் தெரிவித்தனர்.