சண்டிகர்: பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அவரது கணவரே அறையும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தல்வாண்டி சமோ தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பல்ஜீந்தர் கவுர். இவரது கணவர் சுக்ராஜ் சிங் ஆம் ஆத்மி கட்சியின் இளைஞரணி நிர்வாகியாக இருக்கிறார். இந்நிலையில் இவர்கள் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காணொலியில் எம்.எல்.ஏ. பல்ஜீந்தர் கவுரை, அவரது கணவர் அறையும் காட்சி பதிவாகியிருக்கிறது.
கணவரால் பெண் எம்.எல்.ஏ. தாக்கப்படும் காட்சிகள் இணையத்தில் அதிகளவில் பரவியதையடுத்து பஞ்சாப்பில் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. கணவரின் செயலுக்கு பல கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. கணவர் தாக்கியது குறித்து பல்ஜீந்தர் கவுர் புகார் அளிக்கவில்லை என்றபோதும் பஞ்சாப் மாநில மகளிர் நல ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.