’எமோஷ்னலான டைம் டிராவல் திரைப்படம்’ – ஒரு புதுமையான முயற்சி இந்த “கணம்”

ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த், ரித்து வர்மா மற்றும் நடிகை அமலா நடிப்பில் டைம்டிராவல் கதைகளத்துடன் உருவாகியுள்ள படம் ‘கணம்’. செப்டம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.

image

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நடிகர்கள் ஷர்வானந்த், நாசர், ரவி ராகவேந்திர், சதீஷ், ரமேஷ் திலக், நடிகை ரித்து வர்மா, அமலா அகினேனி, இயக்குநர் ஸ்ரீகார்த்திக், ஒளிப்பதிவாளர் சுஜித் சாராங்க், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.

image

நிகழ்ச்சியில் பங்கேற்ற மதன் கார்க்கி பேசுகையில், ”அமலா அவர்களை ரொம்பநாள் கழித்து திரையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுவாக டைம்ட்ராவல் கதை எனக்கு பிடிக்கும். ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்கள் உலகம் அழியப்போவது பற்றிய ஜானரில் தான் இருக்கும். ஆனால் அந்த பாணியை மாற்றி எமோஷனலாக இந்தப் படத்தை எடுத்திருக்கார் இயக்குநர். படத்தில் ஒரு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் டைம் ட்ராவலுக்கு தகுந்த மாதிரி வரிகள் எழுதியது சுவாரஸ்யமாக இருந்தது” என்று தெரிவித்தார்.

image

நாசர் பேசுகையில் “இந்த டைம் மிஷின் நான்கு வருடங்களுக்குப் பிறகு லேண்ட் ஆனதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு படமும் வித்யாசமாக இருக்க வேண்டும் என பணியாற்றுபவர் பிரபு. அவர் அனுப்பி வைத்த இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கதை சொன்ன போது சந்தோஷமாக இருந்தது. சைன்ஸ் பற்றி அவருடன் நிறைய பேசினேன். இந்த இளைஞர்களுடன் இணைந்து நடித்ததில் என்னையும் இளைஞனாக உணர்ந்தேன். அமலா மிக அருமையான நபர். அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அப்போது பார்த்தது போலவே இப்போதும் இருக்கிறார். இந்தப் படத்துக்காக இரண்டு மணிநேரம் மேக்கப் போட்டு நடித்தது மறக்க முடியாத அனுபவம். ஷர்வானந்த், ரித்து வர்மா போன்ற திறமையானவர்களுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி” என்று பேசினார்.

image

ரமேஷ் திலக் பேசுகையில் “அமலா மேடமுடன் நடித்துவிட்டேன் என்பதே மிகப்பெரிய மகிழ்ச்சி, அதற்கு இயக்குநருக்கு நன்றி. நாசர் சாருடன் இணைந்து சில படங்கள் நடித்திருக்கிறேன். ஆர்டிகள்15 படம் பார்த்துவிட்டு அதில் நீங்கள் நடித்தது பெருமையாக இருந்தது என கூறினேன். அவர் கும்பளங்கி நைட்ஸ் பார்த்துவிட்டு அதில் நீ இருந்தது பெருமை எனக் கூறினார்.”

சதீஷ் பேசுகையில் “இந்தக் கதையை இயக்குநர் சொல்லும் போது, லேட் டாப்பில் இருந்து பின்னணி இசையை ஒலிக்கவிட்டு சொல்லுவார். இப்படி கதை சொல்லும் இயக்குநரை நான் சந்தித்ததே இல்லை. லேட்டாக வந்தாலும் சரியான நேரத்தில் இந்தப்படம் வெளியாகி இருக்கிறது” என்றார்.

image

ரித்து வர்மா பேசும் போது, “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்திற்குப் பிறகு எனது தமிழ்ப்படம் இது. அமலா அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் உண்மையில் மிக அருமையான நபர், மிக அன்பாக பழகினார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் போல் இந்தப் படமும் வரவேற்பைப் பெறும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

image

இயக்குனர் ஸ்ரீகார்த்திக் பேசுகையில் “குறிப்பிட்ட வயது வரை, நேரத்தை நான் பொருட்படுத்தியதில்லை. ஆனால் நேரத்தின் மதிப்பு தெரியும் போது தான் அது எவ்வளவு முக்கியம் எனப் புரிந்தது. என்னுடைய அம்மா சில காலம் தான் வாழ்வார் எனத் தெரிந்த போது என்ன செய்வது என்றே புரியாமல் நின்றேன். எனக்கு கதை சொல்ல மிகவும் பிடிக்கும். ஒரு நாள் கதை எழுத உட்கார்ந்த போது இதே டைம் வைத்து எழுதலாம் எனத் தோன்றியது. என் அம்மாவை மறுபடி சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை மையமாக வைத்து இரண்டு வருடமாக இந்தக் கதையை எழுதினேன். இப்போது இது படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்ததில் எனக்கு பெரிய பெருமை. பிரபுவிடம் இந்தக் கதையை சொன்ன போது எமோஷனலான இடங்களில் அழுதார். எனக்கு என் கதை மேல் நம்பிக்கையை அளித்தார்.” என்று பேசினார்.

image

பெரிய இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் நடிகை அமலா பேசுகையில், “ஒரு படத்தை பற்றி இவ்வளவு சிறப்பாக பேசுகிறார்கள் என்றால் அது அதற்கு தகுதியான படமாக தான் இருக்கும். நான் ஹீரோயினாக நடித்த போது தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். கணம் படத்தில் ஒரு தாயாக நடித்திருக்கிறேன். இதற்கும் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

image

ஷ்ரவானந்த் பேசும்போது, “எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு தமிழ் படங்களில் ஏன் நடிக்கவில்லை எனக் கேட்பார்கள். கணம் போன்ற ஒரு சிறப்பான கதை அமையாதது தான் அதற்கு காரணம். எஸ்.ஆர்.பிரபு பத்து வருடமாக பல கதைகள் அனுப்பிக் கொண்டிருந்தார். அதில் எதுவும் அமையவில்லை, ஆனால் கணம் கதை கேட்டதும் பிடித்துவிட்டது. பாகுபலி நான்கு வருடங்களாக எடுத்தார்கள். நாங்கள் கணம் படத்தை திரைக்கு கொண்டுவர ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டோம். எனவே கணம், பாகுபலியைவிட பெரிய படம்.”

image

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில், “கோவிட் எல்லோரையும் சோதித்தது. ஆனால் கணம் படத்தை வேறுவிதமாக சோதித்துவிட்டது. ஐந்து வருடம் மிக பாரமாக இருந்தது. இந்தக் கதையை ஸ்ரீகார்த்திக் சொன்ன போது அவர் எடுத்துவிடுவாரா என்ற சந்தேகமே வரவில்லை. அவ்வளவு கான்ஃபிடன்ட்டாக சொன்னார். இந்தக் கதையை என்னிடம் கொண்டு வந்த நடிகர் ஸ்ரீக்கு நன்றி. படத்தில் அவர் நடிக்கவில்லை வேறு நடிகர் தான் என சொன்ன போது அதற்கும் பெருந்தன்மையாக சம்மதித்தார். ஷர்வானந்த்க்கு மாயா உட்பட பல கதைகளை அனுப்பி இருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைய சூழல் உருவாகியிருக்கிறது. அமலா அவர்கள் மறுபடி நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகத்துடன் தான் அணுகினோம். ஆனால் அவர் மகிழ்ச்சியாக வந்து நடித்துக் கொடுத்தார். படம் கண்டிப்பாக எல்லோருக்கும் கனெக்ட் ஆகும்” என்று பேசியுள்ளார்.

image

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித்துள்ள இந்தப் படம் தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.