டெல்லி: குஜராத் கலவர வழக்கில் பொய்யான தகவல்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் திஸ்டாவுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் திஸ்டாவுக்கு இடைக்காலப் பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2002ம் ஆண்டு, குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் இறந்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து குஜராத் முழுவதும் மோதல்கள் வெடித்தன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து, மோடி உள்பட 64 பேர் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் திஸ்டா செடல்வாட் ஆகியோர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. பிரதமர் மோடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக செயற்பாட்டாளர் திஸ்டா செடல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பட், ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை. இதனையடுத்து திஸ்டா செடல்வாட் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீது பதிலளிக்க குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இன்று இந்த வழக்கின் விசரணை மீண்டும் நடைபெற்றது. 2002 குஜராத் கலவர வழக்குகளில் அப்பாவி மக்கள் மீது பொய்யான ஆவணங்களை தயாரித்ததாக அவர் கைது செய்யப்பட்ட வழக்கில், ஆர்வலர் திஸ்டா செடல்வாட்டுக்கு இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை இடைக்கால ஜாமீன் நிலைப்பாட்டில் இருந்து தான் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள விசாரணையில் திஸ்டா செடல்வாட் முழு ஒத்துழைப்பை வழங்குவார், மேலும் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்றும் நீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.