கொச்சி: அல்போன்ஸ் புத்திரன் இயக்கியுள்ள ‘கோல்டு’ திரைப்படம் ஒணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி வெளியாக இருந்தது.
பிருத்விராஜ், நயன்தாரா, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் கோல்டு படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கோல்டு படத்தின் ரிலீஸ் குறித்தும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ட்வீட் செய்துள்ளார்.
நேரம் படத்தில் அறிமுகம்
நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான ‘நேரம்’ திரைப்படம், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான இந்தப் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே தரமான ஹிட் கொடுத்த அல்போன்ஸ் புத்திரனுக்கு தமிழ், மலையாள திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு எழுந்தது. நேரம் படத்தைத் தொடர்ந்து ‘பிரேமம்’ படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்திரன்.
மெஹா ஹிட் அடித்த பிரேமம்
நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான பிரேமம், சினிமா ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. கிட்டத்தட்ட சேரனின் இயக்கத்தில் வெற்றி பெற்ற ஆட்டோகிராப் படத்தின் இன்னொரு வடிவமாக இந்தப் படம் வெளியானது. ஜார்ஜ் டேவிட்டாக நிவின் பாலி, மலை டீச்சராக சாய் பல்லவி, செலினாக மடோனா செபாஸ்டியன், மேரியாக அனுபமா பரமேஸ்வரன் என அனைத்து பாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நிரந்தரமாக பதிந்தது,
பாட்டுக்கு முன்னர் கோல்டு
பிரேமம் படத்திற்குப் பிறகு படங்கள் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்திரன், ஃபஹத் பாசில், நயன்தாரா நடிப்பில் ‘பாட்டு’ என்ற படத்தை இயக்க முடிவெடுத்தார். ஆனால் அதற்கு முன்பாக பிருத்விராஜ், நயன்தாரா நடிக்க ‘கோல்டு’ படத்தை இயக்கி முடித்துள்ளார். பிருத்விராஜ், நயன்தாரா, அல்போன்ஸ் புத்திரன் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தாறுமாறான எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பட்டையைக் கிளப்பி இருந்தது
ரிலீஸ் தேதியில் மாற்றம்
‘கோல்டு’ திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கோல்டு ரிலீஸ் குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ட்வீட் செய்துள்ளார். அதில், “சில காரணங்களால் ‘கோல்டு’ ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது. எங்கள் தரப்பில் வேலை தாமதமாகிவிட்டதால், ‘கோல்டு’ திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகும். தாமதத்திற்கு மன்னியுங்கள். கோல்டு வெளியாகும் போது இந்த தாமதத்தை நாங்கள் ஈடுசெய்வோம் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் 7 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கோல்டு’ படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.