2002 குஜராத் கலவர விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
2002ம் ஆண்டு குஜராத் கலவர சம்பவத்தின் போது அப்போதைய மாநில முதல்வரான இன்றைய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் ஜாமீன் கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் மனு மீதான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் நீண்ட நாட்களாக மனு கிடப்பில் போடப்பட்டதால் சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் ஜாமீன் கோரிய மனு குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் ஜாமினில் விடுவிக்கப்படுகிறாரா? இல்லையா? என்பதை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளமுடியாது எனவும், குஜராத் உயர்நீதிமன்றமே அத்தகைய முடிவை தீர்மானிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார். அதே நேரத்தில் ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் விசாரணை காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவர் தாக்கல் செய்த ஜாமீன் கோரிய மனு மீது குஜராத் உயர்நீதிமன்றம் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தீஸ்தா செதல்வாட்டிற்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் குஜராத் உயர் நீதிமன்றம், ஜாமின் கோரிய வழக்கில் தனது உத்தரவை அறிவிக்கும் வரை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட் தன்னுடைய பாஸ்போர்ட்டை குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்த தலைமை நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தற்போதைய நிலவரம் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் குஜராத் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு முடித்து வைத்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM