இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு! அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதில்

சென்னை:  போதைப்பொருள் அதிகரிப்புக்கு மத்தியஅரசுதான் காரணம், என்றும் குஜராத்தில் இருந்துதான் போதைப்பொருள் வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளது அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் அதிகரித்து உள்ளதால், அதை தடுக்க கஞ்சா 2.0 என்று பெயரிட்டு டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்ர். இருந்தாலும் சென்னையில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க முடியவில்லை. வடசென்னையின் பெரும் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், திருவொற்றியூர், தண்டடையார்பேட்டை பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இதை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர். கஞ்சதா விற்பனைக்கு, அந்த பகுதிகளைச் சேர்ந்த  அரசியல் கட்சியினரும், சில காவல்துறையினருமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, குஜராத் உள்பட வட மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதை பொருள் தமிழ்நாட்டிற்குள் வருவதாகவும், இதில், மத்திய அரசுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடி பதிலுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் உச்சத்தில் உள்ளதாக சாடியுள்ளார். போதைப்பொருள் புழக்கம் பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, மது ஆலை நடத்தி வரும் ஜெகத் ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோரையும் உடனிருத்தி செய்தியாளர்களை சந்தித்திருந்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் வரும் பொய்யான தகவல்களை வைத்து அமைச்சர் பேசியது வேடிக்கையானது என குறிப்பிட்டுள்ளார்.

2021-ம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னரே தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் போதைப்பொருட்கள் பிடிபடு கிறது. அது என்ன தனியார் துறைமுகமா? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, சமூகவலைதளங்களில் திமுகவினர் பரப்பும் பொய்களை சேகரித்து ஒரு செய்தியாளர் சந்திப்பை அமைச்சர் நடத்தியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழ்நாட்டில் எட்டுத்திக்கும் கஞ்சா அமோகமாக விற்பனையாகிறது. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க மத்திய அரசின் மீது பழிபோடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலில் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடிவிட்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என தெரிவித்த அவர் இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழ்நாடு உள்ளதாகவும், திமுக-வின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் மக்களை ஏமாற்றாமல் இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.