"ஹார்ட்ஸ் 100" திட்டத்தின் கீழ் 100 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை!

15 வயதுக்குட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ் 100 என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச இருதய அறுவை சிகிச்சை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் மணீஷ் லகோடியா மற்றும் காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டமேசை இந்தியா அமைப்பின் பகுதி தலைவர் விஜய ராகவேந்திரா மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 பிரிவு தலைவர் விபுல் ஜெயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 கடந்த ஆண்டு இதய நோயால் குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ் 100 என்ற திட்டத்தின் அடிப்படையில், இதய அறுவை சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ளும் சேவையை கடந்த ஆண்டு துவக்கியது. தற்போது வரை 350 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் இத்திட்டத்தின் மூலம் முடிக்கப்பட்டு உள்ளது. 

நடப்பு ஆண்டில் குறைந்தபட்சம் 100 அறுவை சிகிச்சைகளை முடிக்கத் திட்டமிட்டுள்ள இந்த அமைப்பு, காமாட்சி மருத்துவமனையுடன் இணைந்து அறுவை சிகிச்சைகளைச் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ், பிறவி இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் உபகரணங்கள் விலை உயர்ந்தவை என்று குறிப்பிட்டார். விழிப்புணர்வு இல்லாமை, நிதி மற்றும் மருத்துவமனை வசதிகள் போன்ற முக்கிய பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இதுவரை காமாட்சி மருத்துவமனை 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சேவை வழங்கி உள்ளதாக கூறினார். வசதியற்ற குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளுக்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தரமான சுகாதார சேவையை வழங்க முடியும் என்றார்.

ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மணீஷ் லகோடியா உரையாற்றும்போது, “குழந்தைகளின் அனைத்து இதய குறைபாடுகளுக்கும் சிகிச்சை பெற உதவும் வகையில் இந்த திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரவுண்ட் டேபிள் இந்தியாவின் இந்த முயற்சியால் மற்ற மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நோயாளிகளும் பயனடைவதாகவும் அவர் கூறினார். முடிந்தவரை எவ்வளவு குழந்தைகளுக்கு உதவ முடியுமோ அவ்வளவு முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்த அவர், உதவி தேவைப்படுபவர்கள் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 -ன் சமூக வலைதள பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.