காமரெட்டி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பீர்கூரில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்ய சென்றார். அவருடன் மாவட்ட கலெக்டர் ஜிதேஷ் பாட்டீலும் உடன் சென்றார். அப்போது கலெக்டரிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசியில், ஒன்றிய அரசின் பங்கு என்ன?’ என்று அவரிடம் கேட்டார்.
அதற்கு அவர் தனக்கு தெரியாது என்று பதிலளித்தார். கோபமடைந்த நிர்மலா சீதாராமன், ‘நீங்கள் கலெக்டராக இருந்தும், இதுகுறித்த விபரம் உங்களுக்குத் தெரியாதா?; அரை மணி நேரத்தில் இதற்கான பதிலை அளிக்க வேண்டும்’ என்று கடிந்து கொண்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ‘ஏழைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் ஒரு கிலோ ரூ.35க்கு வாங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஒன்றிய அரசு செலுத்துகிறது.
ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஏன் வைக்கவில்லை? மாலைக்குள் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறிவிட்டு சென்றார். முன்னதாக காமரெட்டிக்கு நிர்மலா சீதாராமன் வந்தபோது, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.