மதுரை பாணியில்..! – நிர்மலா சீதாராமன் வாகனத்தை வழிமறித்த காங்கிரஸ் தொண்டர்கள் – தெலங்கானாவில் பரபரப்பு!

தெலங்கானா மாநிலத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகனத்தை, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் வழிமறித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்திற்கு வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமாரெட்டி மாவட்டத்தில், பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். இன்று, ஜஹீராபாத்தில் இருந்து காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்வாராவுக்குச் சென்று கொண்டிருந்த போது, வழியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாகனத்தை, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் வழிமறித்தனர். இதனால் அவரது கார் உட்பட பாதுகாப்பு வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதனை தொடர்ந்து அங்கு வந்த பாஜகவினர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக, சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் தலையிட்டு அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இதன் பின்னர், வழியை சரி செய்த போலீசார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகனம் செல்ல ஏற்பாடு செய்தனர்.

இதை அடுத்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாகனத்தை வழிமறித்த காங்கிரஸ் கட்சித் தொண்டர்களை, போலீசார் கைது செய்தனர். அதன்பின், காமாரெட்டி மாவட்டம் சென்றடைந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்குள்ள நியாய விலை கடைகளுக்குச் சென்று, கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் ஏன் காணவில்லை என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அவர்களிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்காததால், அதிகாரிகளிடம் விவரங்களைக் கண்டறிந்து தெரிவிக்குமாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தின் மதுரையில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனின் வாகனத்தை பாஜகவினர் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், தற்போது, அதேப் போல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாகனத்தை, காங்கிரஸ் தொண்டர்கள் வழிமறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.