இப்போ ஓபிஎஸ்ஸுக்கு வேற வழியே இல்ல… இதை செஞ்சே ஆகணும்!

தான் திட்டமிட்டப்படி ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்தி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராகவும் முடிசூட்டிக் கொண்டார் இபிஎஸ். இப்படி அரசியல்ரீதியாக தன்னை வெற்றிக் கொண்ட எடப்பாடி பழனிசாமியை என்ன செய்கிறேன் பாருங்கள் என்று, இந்த விஷயத்தை கையி்ல் எடுத்து கொண்டு கோர்ட்டுக்கு சென்ற ஓபிஎஸ் இன்று மூக்கு உடைப்பட்டு நிற்கிறார். இதற்கு நிவாரணம் தேடி உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக அலர் அறிவித்திருந்தாலும், இன்றைய தேதியில் சட்டரீதியாகவும் அவரை இபிஎஸ் வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படி அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் ஓபிஎஸ்ஸை இபிஎஸ் வென்றுள்ள நிலையில், கட்சியின் இன்றும் தமக்குதான் தொண்டர் பலம் உள்ளது என்று தான் திரும்ப திரும்ப சொல்லிவருவதை நிரூபிக்க இடைத்தேர்தல் எனும் அஸ்திரத்தை கையில் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஓபிஎஸ்.

அதாவது ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக உள்ளார். இவரை போன்றே மற்றொரு ஆதரவாளரான பி.ஹெச். மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொதுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இந்த இருவரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும்.

அப்போதும் இபிஎஸ், ஓபிஎஸ் என்று அதிமுக இரண்டாக அணியாக பிளவுப்பட்டிருக்கும் நிலையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு ஆறு மாதத்துக்குள் இரு தொகுதியிலும் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகும். அப்படியொரு தேர்தல் நடக்கும்பட்சத்தில், அதில் இபிஎஸ், ஓபிஎஸ் அணி வேட்பாளர்களில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே அதிமுக தொண்டர்களின் பலமும், பொதுமக்களின் ஆதரவும் இருப்பதாக நிரூபணமாகும்.

அதேசமயம் இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி ஜெயிப்பதே இதுநாள் வரையிலான வரலாறாக இருந்துவரும் நிலையில், ஒரத்தநாடு, ஆலங்குளம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதில் திமுக ஜெயித்துவிட்டால் அதுவே ஓபி,எஸ்- இபிஎஸ் தரப்புக்கு ஒரு வார்னிங் மெசேஜ் தருவதாக இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதாவது தாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றுபட்டு இருந்தால் மட்டுமே அதிமுகவுக்கு வெற்றி என்ற செய்தியை ஓபிஎஸ்- இபிஎஸ் அன்கோவுக்கு உணர்த்தும்படி அந்த இடைத்தேர்தல் அமையும்.

இதி்ல் முடிவு எதுவாக இருந்தாலும், இடைத்தேர்தல் அஸ்திரத்தை ஓபிஎஸ் முதலில் கையில் எடுத்தே ஆக வேண்டும். அதைவிடுத்து தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்… குண்டர்கள் அவர்கள் பக்கம்; தொண்டர்கள் எங்கள் பக்கம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் இனிமேல் சரிப்பட்டு வராது என்று அழுத்தம் திருத்தமாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.