உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கொச்சி கப்பல் தட்டும் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் சிறப்பு அம்சங்கள்:
- ராணுவத் துறையில் தற்சார்பை நோக்கிய குறிப்பிடத்தக்க முயற்சியாக ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும்.
- இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனமாக இயங்கும் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட விக்ராந்த், நவீன ரக தானியங்கி அம்சங்களுடன், இந்திய கடல்சார் வரலாற்றில் பிரமாண்டமான போர்க் கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது.
- 1971-ஆம் ஆண்டு போரில் முக்கிய பங்காற்றிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நினைவாக அதன் பெயரே இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது.
- 100 எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில்துறை நிறுவனங்களின் உபகரணங்களையும், இயந்திரங்களையும் விக்ராந்த் போர்க்கப்பல் தன்னகத்தே கொண்டுள்ளது.
- விக்ராந்த் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட பிறகு, நாட்டின் கடல்சார் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் வகையில் இரண்டு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இந்திய கடற்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் பின்புலம்: இந்திய கடற்படையில் ஏற்கெனவே ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்தது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்தக் கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1961 முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியது. 1971-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் போரில் இந்த கப்பல் முக்கிய பங்காற்றியது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், 2002 முதல் 2012-ம் ஆண்டு வரை அருங்காட்சியகமாக இருந்தது. அதன்பிறகு பயனற்ற நிலைக்கு சென்றதால், கடந்த 2014-15-ல் இந்தக் கப்பல் உடைக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய கடற்படையில் அதே பெயரில் புதிய விமானம் தாங்கி கப்பலை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உள்நாட்டிலேயே அத்தகைய கப்பல் தயாரிக்கப்பட்டது. இந்த புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கடந்த 2013-ம் ஆண்டு கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. கப்பலில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், சமீபத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இப்போது பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
> செலவு: ரூ.20,000 கோடி செலவில், கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பலில் பல நவீன தானியங்கி அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 100-க்கும் மேற்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்தியில், ‘பாதுகாப்புத் துறையில், பிரதமரின் தற்சார்பு இந்தியா கொள்கைக்கு சிறந்த உதாரணமாக புதிய விக்ராந்த் ஐஎன்எஸ் கப்பல் இருக்கிறது’ என தெரிவித்துள்ளது.
கடற்படை துணைத் தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.என்.கார்மேட் கூறும்போது, “புதிய கப்பலில், கடற்படை போர் விமானங்களை ஏற்றி இறக்கும் பரிசோதனை, வரும் நவம்பரில் தொடங்கி, அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடையும். முதல் சில ஆண்டுகளுக்கு இந்த கப்பலில் மிக்-29 கே ரக போர் விமானங்கள் இயக்கப்படும்” என்றார். கடற்படையில் ஐஎன்எஸ் விக்ராந்த் சேர்க்கப்படுவது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்பு கொள்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஐஎன்எஸ் விக்ராந்தின் சிறப்பு: புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதன் மொத்த எடை 40,000 டன்கள். கப்பலின் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் ஆகும். மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் இருப்பார்கள். 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது.