சத்குரு பிறந்தநாளில் 2.5 லட்சம் மரங்களை நடும் பணிகளில் விவசாயிகள் மும்முரம்: ஈஷா தகவல்

கோவை: சத்குரு பிறந்தநாளில் 2.5 லட்சம் மரங்களை நடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும், தமது இலக்கை நோக்கி காவேரி கூக்குரல் இயக்கம் செயல்படுவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈஷா வெளியிட்டுள்ள அறிக்கை: “சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பர் 3, நதிகளுக்கு புத்துயிர் ஊட்டும் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடந்த 3 தினங்களாக தங்கள் நிலங்களில் 2.5 லட்சம் டிம்பர் மரங்களை நட்டு வருகின்றனர். மொத்தம் 130 விவசாயிகளின் பண்ணைகளில் 2 லட்சத்து 52 ஆயிரம் மரங்கள் செப்டம்பர் 1 முதல் 3-ம் தேதி வரையில் நடப்பட்டு வருகிறது. இதே போன்ற மரம் நடும் நிகழ்வுகள் நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்றோரின் பிறந்த நாளிலும் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் விவசாயிகள் மூலமாக மரம் நடும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் ஈடுபட்டு வருகிறது.

காவேரி வடிநில பகுதிகளில் 242 கோடி மரங்களை நடும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் விவசாய நிலங்களில் 2.5 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் 1 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 35 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற பல்வேறு டிம்பர் மரங்கள் வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பல மடங்கு அதிகரிப்பதுடன் மண் வளமும், நீர் வளமும் அதிகரிக்கிறது.

மேலும் நடப்பு மழைக்காலத்தில் அதிக அளவில் மரங்கள் நடுவதற்கு தேவையான நாற்று உற்பத்தி மற்றும் மரம் நடுவதற்குத் தேவையான ஆயத்தப் பணிகளையும் காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது. மேலும் மரம் சார்ந்த விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகுப்புகள் நேரடியாகவும் இணைய வழியிலும் நடத்தி வருகிறது.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து, அவர்களின் மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்து, நடவு செய்ய ஆலோசனை வழங்கி உடனிருக்கின்றனர். நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இத்தகைய செயல்களை செய்து வரும் ஈஷா தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒருங்கிணைத்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் மாபெரும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது” என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.