போபால்: ‘கேஜிஎப்’ திரைப்படம் பார்த்துவிட்டு தானும் அப்படத்தில் வருவதைபோல பிரபலமாக வேண்டும் என 5 கொலைகளை செய்துள்ளார் 19 வயது இளைஞன் ஒருவன்.
சமூகத்தில் நடைபெறும் மாற்றங்களுக்கு கலாச்சார மையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரைப்படங்கள் காலச்சார மையங்களின் முதன்மையானதாக இருக்கிறது.
தற்போது இந்த சீரியல் கொலையாளி இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கலாச்சார மையம்
திரைப்படங்கள் என்பது உலகம் ழுமுவதும் இருக்கும் ஒரு கலாச்சார மையம். பள்ளிகள், குடும்பங்கள், ஆன்மீக தலங்கள் எப்படி மனிதனை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனவோ அதேபோலவே திரைப்படங்களும் காலம் காலமாக மனித மனங்களை கட்டமைப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. சில திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களை போலவே தங்களை இளைஞர்கள் கருதிக்கொண்டு அவர்களைப்போலவே நடந்துகொள்வது, குழந்தைகள் சிலர் கதாநாயகனை போல செய்து காட்டினால் அதை வரவேற்பது போன்றவை எதிர்மறை தாக்கங்களை மட்டுமே அவர்களின் மனங்களில் விதைக்கும் என மனநல ஆலோசகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கேஜிஎஃப் மோகம்
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த இளைஞன் இதுவரை 5 கொலைகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் செக்யூரிட்டி காவலர்கள். இந்த கொலைகளை இந்த 19 வயது இளைஞன்தான் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவனை பிடித்து விசாரித்ததில் ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் வருவதை போல தானும் விரைவில் பிரபலமாக வேண்டும் என்று அவன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதிலிருந்து திரைப்படங்கள் மனித மனங்களை எவ்வாறு கட்டமைக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
கொலைகளின் தொடக்கம்
19 வயதான சிவபிரசாத்தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலைகள் போபாலில் இருந்து 169 கிமீ தொலைவில் உள்ள சாகரில் இருந்துதான் துவங்கியுள்ளன. கடந்த மே மாதம் மேம்பால கட்டுமான தளத்தில் காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது முகத்தில் ஷூ வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இடத்தில் எதுவும் கொள்ளை போகவில்லை. அதேபோல ஆகஸ்ட் 28ம் தேதி கல்யாண் லோதி எனப்படும் தொழிற்சாலை ஒன்றின் காவலாளி கொல்லப்பட்டார்.
கல் மனிதன்
அடுத்த நாள் இரவே, கலை மற்றும் வணிகக் கல்லூரியின் காவலாளியான 60 வயதான ஷம்பு நாராயண் துபே கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலைகள் அனைத்தும் இரவிலேயே நடந்திருக்கிறது. அதேபோல உயிரிழந்தவர்கள் அனைவரும் செக்யூரிட்டி காவலர்கள். மேலும் இவர்கள் அனைவரும் தூக்கத்தில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதால் ‘கல் மனிதன்’ குறித்த அச்சம் கொலை நடந்த பகுதிகளில் வேகமாக பரவியது.
கைது
இதன் பின்னர் சிவபிரசாத் ஒரு வீட்டில் காவலாளியான மங்கள் அஹிர்வார் என்பவரைக் கொன்றார். அதேபோல கடந்த வியாழன் அன்று சோனு வர்மா (23) என்ற நபரையும் சிவபிரசாத் கொன்றுள்ளார். இதனையடுத்து கொலையாளியை பிடிக்க காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது கொலையாளி, தான் கொலை செய்த ஒருவரிடமிருந்து செல்போனை எடுத்துசென்று பயன்படுத்தியுள்ளார். இதனை உறுதிப்படுத்திய காவல்துறையினர் இந்த செல்போன் செயல்படும் பகுதிக்கு சென்று கொலையாளியை கைது செய்தது. இதனையடுத்து தற்போது கொலையாளி சிவபிரசாத் கொலை செய்யும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.