மதுரை: மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் 18 பாஜகவினருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல் காவல் நிலையத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். காலணி வீசிய சரண்யா உட்பட 10 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் 3 பேருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸார் தேடி வரும் பாஜகவினர் சஞ்சய், மணிமாலா உட்பட 18 பேர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, மனுதாரர்கள் 18 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி, அனைவரும் சேலத்தில் தங்கியிருந்து மறு உத்தரவு வரும் வரை சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தினமும் காலையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.