பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் நலச்சசட்டத்தின்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட அலுவலர் பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
முதியோர்கள், வயதான பெற்றோர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2007-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது ‘பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சட்டம்’.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற பொறுப்பு, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் அதிகாரிக்கு உள்ளதென்றும், ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும், மாவட்டம் தோறும் முதியோர் பராமரிப்பு இல்லங்களை உருவாக்க வேண்டும், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள் தரும் புகார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல விதிகள் உருவாக்கப்பட்டன.
இந்நிலையில்தான், சொத்துகளை அபகரித்துக் கொண்டு பராமரிக்காமல் இருப்பது, சுமையாக இருப்பதாக கருதி வீட்டை விட்டு வெளியேற்றும் பிள்ளைகள் என, முதியவர்கள், பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகளால் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இச்சசட்டத்தின்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற வழிசெய்த மாவட்ட அலுவலரின் உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த காயத்திரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சுப்ரமணியன் என்பவரை திருமணம் செய்து மதுரையிலுள்ள அவருடைய வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் என் மாமனாரும், கணவர் குடும்பத்தினரும் எனக்குப் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர். அதைத் தொடர்ந்து முதியோர்களான தங்களை துன்புறுத்துவதாக மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலரிடம் மாமனாரும் மாமியாரும் புகார் செய்து, எனக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர்.
காவல்துறை உதவியுடன் என்னை வீட்டை விட்டு வெளியேற்றியும், வீட்டை மீட்டு மாமனார் மாமியாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் முதியோர் பாதுகாப்பு அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில்தான், மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காயத்திரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணனிடம் பேசினோம்…
“மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. முதியோர் பாதுகாப்பு விதியின்படி மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என்பதுதான் இந்த வழக்கில் முக்கிய சாரம்சம்.
திருமணமாகி 10 வருடங்களை கடந்து 2 பிள்ளைகளுடன் வசித்து வரும் என் கட்சிக்காரரை, குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சித்துள்ளனர். இதற்கு பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சசட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர்.
மாமனாரும் மாமியாரும் வீட்டைவிட்டு முன்பே வெளியேறி இருந்து கொண்டு, தங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக அவர் மகன் மீது புகார் கொடுத்துள்ளனர். மகனை அழைத்து விசாரித்தபோது தன் மனைவிதான் அதற்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். அதை சரியாக விசாரிக்காமல் பெற்றோர் பராமரிப்பு மூத்த குடிமக்கள் நலச்சசட்டத்தின் கீழ் மருமகளை வெளியேற்ற டி.ஆர்.ஓ உத்தரவிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ன்படி, மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ வாரிசோ கிடையாது. எனவே இந்தச் சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. ஆகையால் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக’ உத்தரவிட்டார்.
முதியோர் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை தனிப்பட்ட பிரச்னைகளுக்காக பயன்படுத்தக்கூடாது. அப்படி பார்த்தால் குடும்ப வன்முறை சட்டத்தின்படி என் கட்சிக்காரரும் புகார் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர் வீட்டில் ஒரு பகுதியில் வசிக்க அனுமதி கேட்டும் கணவர் குடும்பத்தினர் ஒத்துக்கொள்ளாமல், இப்படி ஒரு புகாரை எழுப்பி உத்தரவு பெற்றுள்ளார்கள். அதைத்தான் நீதிபதி அவர்கள் ரத்து செய்துள்ளார்” என்றார்.
பல்வேறு தரப்பு மக்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை தனிப்பட்ட பிரச்னைகளுக்கு துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்கின்றனர் சட்ட ஆர்வலர்கள்.