திண்டுக்கல் மாவட்டம் மலையடிவாரத்தில் ஊடுருவியுள்ள மஞ்சள் எறும்புகளால் தாவரங்கள், விலங்குகள் கடுமையான பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உணவு பொருட்களை அறுவடை செய்ய முடியமல் தவிக்கும் நிலையில் தீவுகடந்து வந்த தீய சக்தி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புன்னப்பட்டி ஊராட்சி வேலாயுதம்பட்டி கிராமம் கரந்தமலை அடிவாரத்தில் அரிய வகை மஞ்சள் பைத்தியம் எறும்பு கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் கரந்தமலையில் சுற்றி வசிக்கும் விவசாய குடும்பத்தினர்கள் தாங்கள் பயிரிட்டுள்ள விவசாய நிலங்களில் விளைந்திருக்கும் காய்கனி களை கூட அறுவடை செய்ய முடியாமல் அவ்வப்போது பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த மலையில் வாழும் முயல். மான். காட்டெருமைகள், மயில், குள்ளநரிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அங்கு வசிக்கின்றன. இந்நிலையில் அங்கு மர்மமான முறையில் ஊர்ந்து கொண்டிருக்கும் மஞ்சள் பைத்தியம் எறும்புகள்,வன விலங்குகளை தாக்குவது மட்டுமல்லாமல் , கால்நடைகளையும் கடித்து துன்புறுத்துகிறது, மனிதவாடைகளை கண்டாலே அட்டை போல் ஒட்டிக்கொண்டு தன்மையுடைய மஞ்சள் பைத்தியம் எறும்புகள் பரவிக் கொண்டே வருகிறது .
இந்த நிலையில், பெங்களூரில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்சன் தர்மராஜன் தலைமையில் டாக்டர். ரஞ்சித், சஹானாஸ்ரீ, ஃபெமி இ பென்னி குழுவினர் கரந்தமலை கிராம பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகளை எடுத்து ஆராய்ச்சிக்கு கொண்டு சென்று உள்ளனர்.
மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு எறும்பு தடுப்பதற்காக மருந்துகளையும் கொடுத்து உள்ளனர்..இந்த ஆராய்ச்சி முழுமையாக முடிந்த பின்பு தான் இந்த எறும்புகளை பற்றி எவ்வாறு இதனை சரி செய்ய முடியும் என்று தெரியவரும் என்று பொதுமக்களிடம் கூறி சென்றுள்ளனர்.. மேலும் இது குறித்து ஒரு ஆய்வறிக்கையும் வெளியிட்டனர்.
இதில் மஞ்சள் எறும்புகள் உதாரணமாக இந்திய பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பெரிய காலனியாக இந்த மஞ்சள் எறும்புகள் பெருக்கெடுத்தன. சிவப்பு நண்டுகளின் சாம்ராஜ்ஜியமான கிறிஸ்மஸ் தீவில் இந்த மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால், பல நண்டுகள் நிலைகுலைந்து குருடாகி இறுதியில் மடிந்துள்ளன.
இந்த எறும்புகள் இரவு மற்றும் பகல் நேரங்களில், 21 டிகிரி முதல் 35 டிகிரி சூழலில் இரைதேடும். 26 முதல் 30 டிகிரியில் இதன் இரை தேடும் நடவடிக்கை உச்சம் அடைந்து 44 டிகிரி வரை இயங்கும்.
உலகின் மற்ற பகுதிகளில் பதிவான மஞ்சள் எறும்புகள் பற்றிய வரலாறு மூலம், அந்த வகை எறும்பை உரிய கவனம் செலுத்தி தடுக்காவிட்டால் அவை அங்குள்ள சுற்றுச்சுழலை முழுமையாக அழிப்பதுடன் தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
வேலாயுதம்பட்டியில் கவனித்தபோது, மஞ்சள் எறும்புகள் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளன. நிலத்தில் வேறு பூச்சிகளையோ, சிறிய விலங்குகளையோ பார்க்க முடியாத அளவுக்கு அதன் செயல்பாடு இருக்கிறது.
வண்டுகள், கரப்பான்பூச்சிகள், தவளைகள், மாட்டுச் சாணம், குளவிகள் மற்றும் தேனீக்கள் மீது இந்த மஞ்சள் எறும்புகளின் முரட்டுத்தனமான உண்ணும் வழக்கத்தைப் பார்க்க முடிகிறது. மஞ்சள் எறும்புகள் இத்தகைய உண்ணும் வழக்கத்தின் நீண்ட கால சூழலியல் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். அதைப்பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை.
பாதிக்கப்பட்ட இடங்களில் வேறு எந்த பூச்சிகளையும் காண முடியாயது. இது தீவிர அக்கறை செலுத்த வேண்டிய விஷயமாக உள்ளது. கிராமத்தினரிடம் நாங்கள் பேசியதிலிருந்தும் பாதிக்கப்பட்ட விலங்குகளை நேரடியாக பார்த்தலிருந்தும் பலவீனமாக விலங்குகள் தான் முதலில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய பாதிப்புகள் கண் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் தென்படுகின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது