ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகிய நிலையில் அவருக்கு ஆதரவாக அம்மாநில முக்கிய புள்ளிகளும் சிலர் விலகினர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் மேலும் 20 தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.
ஏற்கெனவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அம்மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்டவர்கள் சிலர் முக்கிய பொறுப்புகளிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சிலர் விலகத் தொடங்கியுள்ளனர்.
தொடர் தோல்வி
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வி, 2014 மற்றும் 2022க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்தது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை தங்களகத்தே கொண்டிருப்பது மட்டுமே கட்சியின் பெரும் பலமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த மூத்த தலைவர்களில் பலர் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
குலாம் நபி ஆசாத் விலகல்
இதன் உச்சக்கட்டமாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து வெளியேறியது காங்கிரசுக்குள் மட்டுமல்லாது இந்திய தேசிய அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு கட்சியை விட்டு விலகும் தலைவர்கள் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தே விலகுகின்றனர். தனது ராஜினாமா குறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், “ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்” என குலாம் நபி ஆசாத் விமர்சித்திருந்தார்.
பதிலடி
இந்நிலையில், குலாம் நபி ஆசாத் விலகல் மற்றும் அவரின் விமர்சனத்திற்கு கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் இலைமைறை காயாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ குலாம் நபி ஆசாத்தின் சொந்த கிராமத்தில் காங்கிரஸ் கூட்டத்தின்போது எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியினர் ஆசாத்தை திட்டுகின்றனர். இந்த வீடியோவை பதிவிட்டு அதில், “இது கிரவுண்ட் ரியாலிட்டி, மோடி சர்க்கார் அனுமதித்த பங்களாக்களில் புதுதில்லியில் அமர்ந்திருப்பவர்களால் உருவாக்கப்பட்ட யதார்த்தம் அல்ல” என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு
குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டு விலகியதையடுத்து அவருக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முகங்களாக அறியப்பட்ட 36 தலைவர்கள் கட்சியிலிருந்து விலகிக்கொண்டனர். ஆனாலும் காங்கிரஸ் இந்த ஜம்மு காஷ்மீரில் அதே பலத்துடன்தான் செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. செப்டம்பர் 1ம் தேதியான நேற்று கட்சியின் கூட்டங்கள் வழக்கம்போல நடைபெற்றதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இதன் மூலம், “50 ஆண்டுகளுக்கும் மேலாக மாதத்தின் முதல் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், குலாம் நபி ஆசாத் வெளியேறிய பிறகும் எந்த இடையூறும் ஏற்படவில்லை” என்றும் காங்கிரஸ் மறைமுகமாக கூறியுள்ளது.
விரைவில் கட்சி
ஆனால் இந்த வீடியோ வெளியான இன்று மாலையே வடக்கு ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் கட்சியினர் மேலும் 20 பேர் கட்சியை விட்டு விலகியுள்ளனர். குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகிய பிறகு ஜம்முவில் தனது முதல் பேரணியை செப்டம்பர் 4 ஆம் தேதி திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் ஆசாத் விரைவில் சொந்த கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 4ம் தேதியான அதே நாளில் ராகுல் காந்தி டெல்லியில் ‘மெஹங்கை பர் ஹல்லா போல்’ எனும் நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.