மருத்துவமனைக்குள் புகுந்த கீரி: திருவில்லிபுத்தூரில் பரபரப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த கீரி சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் பிடித்து வனப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் விட்டனர். திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் கீரி ஒன்று இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரி சுந்தர குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கடைக்குள் இருந்த கீரியை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த கீரி அங்கிருந்து ஓடி கடைக்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குள் புகுந்தது.

இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்ற தீயணைப்புத் துறையினர் மருத்துவமனைக்குள் அங்கும் இங்கும் ஓடி போக்கு காட்டிய கீரியை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மடக்கி பிடித்தனர். பின்னர் கீரியை பாதுகாப்பாக பாக்ஸ் ஒன்றில் வைத்து திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர். மருத்துவமனைக்குள் கீரி புகுந்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.