களவு போன அல்லது தவறுதலாக தவறவிட்ட ஸ்மார்ட்போனை பிளாக் செய்ய உதவுகிறது அரசின் சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டர் (CEIR) என்ற வலைதளம். இந்த தளத்தை பயன்படுத்தி ஒரு ஸ்மார்ட்போனின் அக்செஸை எப்படி பிளாக் செய்வது என பார்ப்போம்.
பெரும்பாலும் யாரும் தங்களது ஸ்மார்ட்போனை தவறவிடுவது கிடையாது. ஏனெனில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தனிநபர் விவரங்கள், குடும்ப உறுப்பினர் விவரங்கள், அலுவலக விவரங்கள், வங்கி பயன்பாடு என அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளது. போட்டோ, வீடியோ, ஆடியோ என இன்னும் ஏராளம் இதில் அடங்கும். சில ரகசியங்களும் இந்த போனில்தான் ஒளிந்திருக்கும். அப்படி இருக்கும் சூழலில் போனை ஒருவர் தவறவிட்டாலோ அல்லது களவு போயிருந்தாலோ அதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
ஸ்மார்ட்போனை தவறவிட்டால் அது குறித்து போலீசில் புகார் கொடுப்பது, சிம் கார்டை பிளாக் செய்வது மற்றும் Find My Phone மூலம் போனை டிராக் செய்து தேடினாலும் அந்த தேடலுக்கு சமயங்களில் பலன் கிடைப்பதில்லை. இந்நிலையில், எப்படி சிம் கார்டை பிளாக் செய்கிறோமோ அதே போல ஸ்மார்ட்போன் பயன்பாட்டையும் பிளாக் செய்யலாம் என தெரிகிறது. அதற்கு உதவுகிறது CEIR வலைதளம். இதனை இந்திய தொலைத்தொடர்பு துறை வடிவமைத்துள்ளது.
இந்த தளத்தின் மூலம் ஸ்மார்ட்போனை பிளாக் செய்வது எப்படி?
- ஸ்மார்ட்போனை பிளாக் செய்ய www.ceir.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்த வேண்டும்.
- அதன் முகப்பு பக்கத்தில் Block Stolen/Lost Phone, Un-Block Found Phone, Check Request Status என மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்.
- அதில் முதல் ஆப்ஷனாக உள்ள பிளாக் போன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் மூலம் போனை பிளாக் செய்வதற்கான கோரிக்கையை முன்வைப்பதற்கான விண்ணப்பம் ஓப்பன் ஆகும்.
- அதில் தொலைந்து போன போன் குறித்த சில விவரங்கள் கேட்கப்படுகிறது. மொபைல் எண், IMEI எண், போனின் பிராண்ட், போனின் மாடல், போன் வாங்கிய ரசீது, போன் தவறவிடப்பட்ட இடத்தின் விவரம், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதற்கான புகார் எண், புகார் நகல், உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட விவரம், அடையாள அட்டை போன்றவற்றை அந்த விண்ணப்பத்தில் கொடுக்க வேண்டியுள்ளது.
- அதை செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படுகிறது. அதை சமர்ப்பித்தால் போனின் அக்செஸ் பிளாக் செய்யப்படுகிறது.
- இதன் மூலம் போனை வேறு ஒரு சிம்கார்டு இன்ஸெர்ட் செய்து பயன்படுத்த முயன்றாலும் ஏமாற்றமே எஞ்சும்.
- போன் மீண்டும் கிடைத்தால் அதனை அன்-பிளாக் ஆப்ஷன் மூலம் பழையபடி பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
- இதில் போனை பிளாக் செய்தவர்கள் தங்களது கோரிக்கையின் நிலை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
- இதே தளத்தில் பயன்படுத்தப்பட்ட போனின் நம்பகத்தன்மை குறித்தும் அறிந்து கொள்ளலாம். அதற்கென KYM என ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது IMEI எண் அடிப்படையில் இயங்குவதாக சொல்லப்பட்டுள்ளது.
போனின் IMEI எண்ணை அறிவது எப்படி? – IMEI எண் போனில் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் போனின் பின்பக்கத்தில் அது குறித்த விவரம் இடம்பெற்றிருக்கும். அதே போல போன் வாங்கியதற்கான ரசீது, போனின் பாக்ஸ் போன்றவற்றிலும் இந்த எண் இருக்கும். இதில் கண்டுபிடிக்க முடியவில்லை எனில் போனின் டயல் பேடில் *#06# என உள்ளிட்டால் IMEI எண்ணை அறிந்து கொள்ளலாம்.