தஞ்சாவூா், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் குற்றம் சாட்டியது.
மேலும், தலைமைச் செயலா், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், “நல்ல நிலையில் உள்ள சாலைகளையும் மீண்டும் அமைக்க ஒப்பந்தத்தில் சோ்த்து, திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறப்போர் இயக்கத்தின் இந்த புகாரில் உண்மை இல்லை என்றும், தனக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், “எதன் அடிப்படையில் ஒப்பந்தம் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் யாரும் தலையிட முடியாது. என்னுடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்துக்காகவும் இதுபோல குற்றம்சாட்டப்படுகிறது” என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.
அறப்போர் இயக்கத்தின் தரப்பில், “எடப்பாடி பழனிசாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கவில்லை” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வரும் 5 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.