ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதுக்கு வருகை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அங்கு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தொண்டர்களுடன் விவாதித்தார்.
இதையடுத்து காமாரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது;-
“முந்தைய ஆட்சிகளின் போது, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் தொகை, நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகையில் 20 சதவீதம் கொரோனா காலத்தில் செலவிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தெலுங்கானா மாநிலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதில் பெறப்பட்ட நிதி, எந்த மாநிலத்திலாவது முறையாக செலவிடப்படவில்லை என்றாலோ, தணிக்கை தொடர்பான விஷயத்தில் பிரச்னை இருந்தாலோ, ஆய்வு நடத்தும் குழு இது குறித்து முறைப்படி புகார் தெரிவிக்கலாம்.”
இவ்வாறு அவர் கூறினார்.