சென்னை: இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க டான் திரைப்படம் இயக்குனர் சிபியிடம் ரஜினிகாந்த் கதை கேட்டுள்ளார். அடுத்ததாக அவர் இயக்கத்தில்தான் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவாஜி படத்தின் போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.
மீசை இராஜேந்திரன்
சினிமாவில் ரமணா படத்திலிருந்து இன்று வரை பல போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்தான் மீசை ராஜேந்திரன். இவர் நடிகர் விஜயகாந்தின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருப்பவர். 1989-லேயே விஜயகாந்திடம் சேர்ந்தாலும் தொடர்ந்து அவரை நடிக்கச் சொல்லி விஜயகாந்த் கூறியிருந்தாலும் ரமணா படத்தில்தான் முதன் முதலில் மீசை ராஜேந்திரன் நடித்தாரா.
நிஜ போலிஸ்
அதிக முறை போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருப்பதால் நிஜ வாழ்க்கையிலும் மக்கள் இவரை அப்படியே பார்க்கிறார்களாம். குறிப்பாக ஒரு நாள் வெளியூரிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது செக் போஸ்டில் போலீஸ் வழக்கம்போல இவர் வந்து கொண்டிருந்த காரையும் பிடித்தார்களாம். இவரை பார்த்தவுடன் சல்யூட் அடித்துவிட்டு சோதனை செய்யாமல் அனுப்பி வைத்ததாக ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
சிவாஜி அனுபவம்
சிவாஜி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். முதல் நாள் படப்பிடிப்பில் ரஜினியிடம் சென்று மீசை ராஜேந்திரன் வணக்கம் வைத்தாராம். அப்போது சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தவர் இவரை கூர்ந்து கவனித்து, உங்களை நான் 1989-இல் இதற்கு முன்னர் சந்தித்துள்ளேன் என்று சரியாக சொன்னாராம். இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று ராஜேந்திரன் ஆச்சரியப்பட்டாராம். அப்போது இயக்குநர் சங்கர் சூட்டிங் செட்டுக்கு வந்துள்ளார்.
ரஜினியின் நற்குணம்
அதுவரை சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ரஜினி ஷங்கரை பார்த்ததும் அதனை கீழே போட்டுவிட்டு டைரக்டர் வருகிறார் பிறகு பேசலாம் என்று ராஜேந்திரனிடம் கூறினாராம். இப்போதுள்ள இளம் கதாநாயகர்கள் கூட இயக்குநரைப் பார்த்தால் கூட கால் மீது கால் போட்டு சிகரெட் பிடிப்பார்கள். ஆனால் ரஜினி சார் தன்னை விட ஜூனியர் என்றாலும் அவ்வளவு மரியாதை கொடுத்தார். அது மட்டுமின்றி சூட்டிங் பிரேக்கில் நானும் நடிகர் சண்முகராஜனும் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது புரொடக்ஷனில் இருந்து ரஜினி சாருக்கு மட்டும் சேர் போட்டார்கள். அப்போது புரொடக்ஷன் ஆளை மரியாதையாக அழைத்து அவர்களும் நடிகர்கள்தான் அவர்களுக்கும் சேர் போடுங்கள் என்று சொல்லி எங்களுக்கு சேர் போட்டவுடன் நாங்கள் அமர்ந்த பின்னர்தான் அவர் அமர்ந்து எங்களுடன் பேசினார் என்று ரஜினியின் நற்குணத்தை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.