சென்னை: தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் திமுக அரசின்சாதனை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் உச்சத்தில் இருக்கிறது என்பதை, ‘ஆபரேஷன் கஞ்சா’ என்ற காவல்துறையினரின் கண்துடைப்பு நடவடிக்கைகளால் காண முடிகிறது. துறைமுகங்கள்தனியார் மயமாக்கப்பட்டதால்தான் போதைப் பொருட்கள் இந்தியாவில் நுழைகிறது என்ற விசித்திரமான சில குற்றச்சாட்டுகளை அமைச்சர் பொன்முடி முன்வைத்துள்ளார்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு தமிழக காவல்துறை கொடுத்த புள்ளிவிவரத்தின்படி, 2021 மே முதல் டிசம்பர் வரைபறிமுதல் செய்யப்பட்ட கோகைன்அளவு வெறும் 0.05 கிலோ ஆகும்.பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து கடத்தி கொண்டுவரப்படும் போதைப் பொருள் இதுதான்.
தமிழகத்தில் பெரிதாக புழக்கத்தில் இருப்பது கஞ்சாதான். தமிழகத்தில் போதைப் பொருள் விற்ற குற்றத்துக்காக 2019 டிசம்பரில் 742 பேர், 2020 டிசம்பரில் 771 பேர், 2021 டிசம்பரில் 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கைது அதிகமாகிவிட்டது என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அமைச்சர் பொன்முடி, இப்போதுதான் தமிழகத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது என்பதை உணர வேண்டும்.
தமிழகத்தை கஞ்சாவின் தலைநகரமாக மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை. தங்களின் திறனற்ற தன்மையை மறைக்க, மத்திய அரசின் மேல் பழி போடுவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்.