இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் நம் நாட்டின் பொருளாதார உற்பத்தி வளர்ச்சி (GDP) 13.5 சதவிகிதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் சொல்லியிருக்கிறது. உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அளவு வளர்ச்சியை வேறு எந்த நாடும் அடையவில்லை என்பதே உண்மை!
ஆனால், இதை ஒரு பெரிய சாதனையாகச் சொல்லி பெருமைகொள்ள முடியாத சூழலில்தான் நாம் இருக்கிறோம். இதற்கு சமீபத்திய உதாரணம், இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி. ஆம், ‘ஜிடிபி 13.5%’ என்று வெளியான புள்ளிவிவரத்தைப் பார்த்து, பங்குச் சந்தைகள் பெரும் ஏற்றம் கண்டிருக்க வேண்டும். ஆனால், இந்தப் புள்ளிவிவரம் வெளியான கடந்த வியாழன் அன்று இந்தியப் பங்குச் சந்தைகள் 1.29% வரை இறக்கத்தையே சந்தித்தன.
ஜி.டி.பி புள்ளிவிவரங்கள் ஏமாற்றத்தைத் தருவதாக இருக்க இரு முக்கியமான காரணங்கள் உண்டு. முதல் காரணம், ஆர்.பி.ஐ உட்பட முக்கியமான சில அமைப்புகள் கணித்த வளர்ச்சி கிடைக்கவில்லை. நடப்பு ஆண்டின் முதலாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 16.2 சதவிகிதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கியும், 15.7 சதவிகிதமாக இருக்கும் என எஸ்.பி.ஐ வங்கியும், 15.4 சதவிகிதமாக இருக்கும் என புளூம்பர்க் சர்வேயும் தகவல் வெளியிட்டன. ஆனால், வந்திருப்பதோ வெறும் 13.5% வளர்ச்சி மட்டுமே.
இரண்டாவது காரணம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் டெல்டா கோவிட் தொற்றினால் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது. அந்தக் குறைந்த வளர்ச்சியில் (low base) இருந்து பார்க்கும்போது, இப்போது மிகப் பெரிய வளர்ச்சி வந்திருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், கோவிட் காலமான 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகளை நீக்கிப் பார்த்தால், நமது பொருளாதாரம் அடைந்த வளர்ச்சி வெறும் 3.8% என்கிற அளவிலேயே இருக்கிறது.
தற்போது கோவிட் தொற்று குறைந்து, இயல்பு நிலை திரும்பிவிட்டது. எனவே, இனிவரும் காலத்தில் நமது பொருளாதார வளர்ச்சி இன்னும் குறையவே வாய்ப்புகள் அதிகம். அதனால், நடப்பு ஆண்டில் 6% வளர்ச்சியை மட்டுமே அடையும் நிலை உருவாகும். இந்த வளர்ச்சியானது அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் குறைந்து, சராசரியாக 5% வளர்ச்சியை மட்டுமே ஆண்டுதோறும் அடையும் நிலைகூட உருவாகலாம்! ஆனால், இப்படியொரு நிலை உருவாக மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. நமது ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து ஆறு மாதங்களாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் இருப்பதெல்லாம் பெருமை அல்ல. கடந்த ஆறு மாதங்களாகத் தொழில் வளர்ச்சி காணவில்லை; அது ஒரே அளவில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
பிரச்னை சிறிதாக இருக்கும்போதே சரிசெய்துவிடுவதுதான் நல்ல நிர்வாகத்துக்கு அழகு! இப்போது வந்திருக்கும் புள்ளிவிவரங்களைப் பார்த்து பெருமைப்படாமல், இன்னும் அதிக வளர்ச்சி அடையத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!
– ஆசிரியர்