நாடு முழுவதும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்ள காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார்.
செப்டம்பர் 7ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்குகிறது. முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்கிறார். பின்னர், கன்னியாகுமரியில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை
தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு தமிழக முதல்வர் ஸ்டாலினிடமிருந்து தேசியக் கொடியினை பெற்று பாரத் ஜோடோ யாத்திரையை தொடங்குகிறார்.
முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் மகாத்மா காந்தி மண்டபத்திற்கு ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நடந்து செல்கின்றனர். கன்னியாகுமரி-ஸ்ரீநகர் வரையிலான 3,570 கிமீ தொலைவு கொண்ட பாத யாத்திரையை செப்டம்பர் 8ஆம் தேதி காலை 7 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ராகுல் தொடங்குகிறார்.
அங்கிருந்து செப்டம்பர் 11ஆம் தேதி கேரளா சென்றடைகிறார். அடுத்த 18 நாட்களில் அம்மாநிலம் வழியாக சென்று செப்டம்பர் 30ஆம் தேதி கர்நாடகா சென்றடைகிறார். கர்நாடாகாவில் 21 நாட்கள் பயணம் நீள்கிறது. பின்னர் வடக்கு நோக்கி ஒவ்வொரு மாநிலங்களாக காஷ்மீர் வரை இந்த பாத யாத்திரை தொடங்கிறது.
இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தி உள்பட 118 தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள்
‘பாரத் யாத்ரிகள்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு நாளைக்கு 20-25 கி.மீ யாத்திரை மேற்கொள்ள உள்ளனர். யாத்திரை மேற்கொள்பவர்களில் ராகுல் காந்தி உள்பட 9 தலைவர்கள் 51-60 வயதுக்குட்பட்டவர்கள். 20 பேர் 25-30 வயதிலும், 51 பேர் 31-40 வயதுக்குள்ளும், 38 பேர் 41-50 வயதுகுட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கும் யாத்திரை வடக்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூரு, பெல்லாரி, ராய்ச்சூர், விகாராபாத், நான்டெட், ஜல்கான், இந்தூர், கோட்டா, தௌசா, அல்வார், புலந்த்ஷாஹர், டெல்லி, அம்பாலா, பதன்கோட், ஜம்மு சென்று ஸ்ரீநகரில் முடிவடைகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பொது மக்கள் 37,000க்கும் மேற்பட்டோர் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த பாத யாத்திரை 2 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காலை 7-10.30 மணி வரையிலும் மற்றொன்று மாலை 3.30 முதல் மாலை 6.30 மணி வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“