புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று அர்ப்பணித்தார்.
இந்திய கடற்படையில் ஏற்கனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ம் ஆண்டு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதன் நினைவாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டது. போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு வடிமைத்த இந்த கப்பல், கேரளாவின் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. கப்பலின் அடிப்பகுதி கடந்த 2009-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கடலில் இறக்கப்பட்டது. மொத்தம் ரூ.20,000 கோடி செலவில் இந்த கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
போர்க்கப்பலை கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கப்பலைநாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். கடற்படைக்கு புதிய கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்படை கொடியில், இருந்த புனித ஜார்ஜின் சிவப்பு பட்டை நீக்கப்பட்டு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் ராயல் முத்திரை இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: திறன்மிக்க, வலிமைான இந்தியாவை உருவாக்க வேண்டும் என நம் சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவு, இன்று நனவாவதை நாம் பார்க்கிறோம்.
ஐஎன்எஸ் விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் மட்டும்அல்ல. நமது கடின உழைப்பு, திறமை, 21-ம் நூற்றாண்டு இந்தியாவின் உறுதிக்கு இது சாட்சியாக விளங்குகிறது. விடுதலையின் ஈடுஇணையற்ற அமுதப் பெருவிழாதான் விக்ராந்த் அர்ப்பணிப்பு விழா. தற்சார்பு இந்தியாவின் பிரதிபலிப்பாக இந்த கப்பல் உள்ளது. உள்நாட்டு திறன், உள்நாட்டு வளம், உள்நாட்டு திறமை ஆகியவற்றின் அடையாளமாக ஐஎன்எஸ் விக்ராந்த் திகழ்கிறது. இந்த கப்பல் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட எஃகு இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலைக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் ஒரு உதாரணம்.
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை மிதக்கும் போர்க்களம், மிதக்கும் நகரம் என கூறலாம். இரண்டுகால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு பெரியது. 5,000 வீடுகளை ஒளிரச் செய்யும் அளவுக்கு தேவையான மின்சாரத்தை இந்த கப்பலால் உற்பத்தி செய்ய முடியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மின்வயர்களை வைத்து காசி முதல் கொச்சி வரை மின் இணைப்பு கொடுக்க முடியும். கடற்படையின் பெண் மாலுமிகள், இந்த கப்பலில் பணியமர்த்தப்படுவர். போர்க்கப்பலில் நமது பெண்கள் பணியாற்ற இனி எந்த தடையும் இருக்காது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
புதியகொடி: பிரதமர் மோடி மேலும், கூறுகையில், ‘‘இந்தியாவில் சத்ரபதி வீர சிவாஜி மிக வலுவான கடற்படையை உருவாக்கி வைத்திருந்தார். அது எதிரிகளை ஓட்டம் பிடிக்க வைத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய கப்பல்கள் மற்றும் அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகத்தை கண்டு மிரண்டனர். அதனால் இந்திய கடற்சார் பலத்தை முறியடிக்க அவர்கள் முடிவு செய்தனர். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி இந்திய கப்பல்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். இந்திய கடற்படை கொடியில் இதுநாள் வரை இருந்து வந்த அந்த அடிமைத்தனத்தின் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, தற்போது புதிய கொடியை பெற்றுள்ளது. புதிய கடற்படை கொடி இனி கடலிலும் வானிலும் பறக்கும்’’ என்றார்.
36 விமானங்கள்
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இடம்பெற்றுள்ள விமானங்கள்:
* மிக்-29கே ரக விமானங்கள் – 26
* காமோவ்-31 ரக ஹெலிகாப்டர்கள் – 4
* எம்.எச். 60ஆர் ஹெலிகாப்டர்கள் – 4
* உள்நாட்டு தயாரிப்பு இலகு ரக ஹெலிகாப்டர்கள் – 2
இந்த கப்பலில் போர் விமானங்களை தரையிறக்கும் பரிசோதனைகள் வரும் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறு, குறு நிறுவன பங்களிப்பு
ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலில் முழுக்க, முழுக்க உள்நாட்டு உதிரி பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட இந்திய குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்புகள் இந்த போர்க்கப்பலில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2,300 அறைகள்
இந்த கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியாது. 7,500 நாட்டிக்கல் மைல் தூரம் வரை தொடர்ந்து செல்லும் திறன் படைத்தது. 43,000 டன் எடையுள்ள இந்த கப்பலில், பயன்படுத்தப்பட்டுள்ள மின் வயர்களின் மொத்த நீளம் 2,500 கி.மீ. இதில் மொத்தம் 2,300 அறைகள் உள்ளன. கடற்படையின் பெண் அதிகாரிகள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவமனை, தீவிர சிகிச்சை பிரிவு, தனிமைபடுத்தப்படும் அறைகள் ஆகியவையும் இதில் உள்ளன. இந்த கப்பலில் அதிநவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கப்பல் மூலம் கடலில் வெகு தொலைவில் இருந்து வான் தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். இந்திய பெருங்கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
இந்தியாவுக்கு புதிய இடம்: கடற்படை விமானம் தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டும் இருந்து வந்தது. தற்போது இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்தின் மற்ற விவரங்கள்
நீளம் – 262 மீட்டர்
உயரம் – 59 மீட்டர்
அகலம் – 62 மீட்டர்
எடை – 40,000 டன்
அதிகபட்ச வேகம் – 28 கடல் மைல்
அடுக்குகள் – 14
அறைகள் – 2,300
கடற்படை அதிகாரிகள்,
வீரர்கள் – 1,700
போர் விமானங்கள்,
ஹெலிகாப்டர்கள் – 36