டெல்லிக்கு இடமாறும் அதிமுக சண்டை… பொதுக்குழு விவகாரத்தில் இனி அடுத்து என்ன?!

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பொதுக்குழு தீர்மானம் மூலமாக நீக்கப்பட்டனர். இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டதே செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார் பன்னீர்செல்வம். அவரின் ஆதரவாளரான வைரமுத்து சார்பிலும் தனியே வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ‘ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதி கட்சியில் என்ன நிலை இருந்ததோ, அந்த நிலை தொடரும்’ எனத் தீர்ப்பளித்தார். இதனால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே தொடரும் சூழல் உருவானது. கட்சியின் ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த எடப்பாடியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை விழுந்தது.

அ.தி.மு.க பொதுக்குழு

நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்தத் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தார் எடப்பாடி பழனிசாமி. நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் விசாரித்த இந்த வழக்கில்தான், எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பில் மூன்று முக்கியமான விஷயங்களை நீதியரசர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். “பொதுக்குழு விவகாரத்தை உயர் நீதிமன்றத்திலேயே விசாரித்து முடியுங்கள் என ஜூலை 29-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, ஜூலை 29-ம் தேதி என்ன நிலை கட்சியில் இருந்ததோ, அதே நிலைதான் தொடரும் என உச்ச நீதிமன்றம் கூறியது. முதல் பொதுக்குழு நடந்த ஜூன் 23, இரண்டாவது பொதுக்குழு நடந்த ஜூலை 11-ம் தேதிகளில் கட்சியிலிருந்த பதவிகளே தொடரும் என உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. இது முக்கியமான விஷயம்.

இரண்டாவதாக, ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், ஒற்றைத் தலைமை தொடர்பாக 2,190 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள் கட்சியின் அவைத் தலைவர் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அவர் அறிவித்தார். அதன்படி ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவும் நடத்தப்பட்டது. இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்திருக்கும் பன்னீர்செல்வம், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்கக் கோரிதான் வழக்கு தொடுத்திருக்கிறார். ஜூன் 23-ம் தேதி செய்யப்பட்ட அறிவிப்பை எதிர்த்து அவர் வழக்குத் தொடரவில்லை. இந்தச் சூழலில், ஜூன் 23-ம் தேதி இருந்த நிலையே கட்சியில் தொடரும் எனக் கூறுவதில் அர்த்தமில்லை. அதைச் செய்யவும் முடியாது.

ஓ.பன்னீர்செல்வம்

மூன்றாவதாக, ஜூன் 28-ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். தன்னை அந்தப் பதவியில் தொடர யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறார். தன்னிச்சையாக, பன்னீர்செல்வத்தாலும் எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்தச் சூழலில், பதவி காலாவதியாகிவிட்டதா, இல்லையா என்பதை நாங்களும் எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. இந்தக் காரணங்களால், தனி நீதிபதி அளித்தத் தீர்ப்பை ரத்து செய்கிறோம்” என தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்ற அமர்வு.

இந்தத் தீர்ப்பால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, தலைமை நிலையச் செயலாளராக வேலுமணி, அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் நியமனங்களும் செல்லும். எடப்பாடி பழனிசாமியால் செய்யப்பட்ட நீக்கங்களும், நியமனங்களும் செல்லத்தக்கதாகி உள்ளன. பன்னீர்செல்வத்திற்குப் பதில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் நியமனம் சபாநாயகரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அவருக்கு அந்தப் பொறுப்பை வழங்குவதில் இனி தடையேதும் இருக்காது. உயர் நீதிமன்ற அமர்வின் இந்தத் தீர்ப்பால் மொத்தமாக உடைந்துபோயிருக்கிறது பன்னீர் தரப்பு. சமீபகாலமாக, அரசியல் வேகம் காட்டியவர்கள், இப்போது அமைதியாகியிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பான விவாதம் பன்னீர் முகாமில் தொடங்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “பன்னீருக்கு இனி இருக்கும் வாய்ப்பு உச்ச நீதிமன்றம்தான். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துவிட்டு, அதில் இறுதித் தீர்ப்பு வரும் வரை, தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக் கொள்வார். போட்டி அ.தி.மு.க நடத்துவார். போட்டி நியமனங்கள், நீக்கங்களைச் செய்வார். சசிகலா போல, அவரும் ஒரு லெட்டர் பேடில் கட்சியை நடத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற அமர்வு கூறியிருப்பதால், அந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய தேர்தல் ஆணையத்தால் செயல்பட முடியாது. ஆக, சின்னத்தை முடக்குவதற்கு சட்டரீதியாக வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்றம் பன்னீருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தால் மட்டுமே, உரிமையுடன் அ.தி.மு.க-வுக்கு அவர் சொந்தம் கொண்டாட முடியும். அதுவரை, ‘சூது கவ்வும்; தர்மம் வெல்லும்’ என அறிக்கை விடுவதைத் தவிர பன்னீருக்கு வேறு வழியில்லை” என்றனர்.

சென்னையில் நடந்து வந்த அ.தி.மு.க சண்டை, இப்போது டெல்லிக்கு இடமாற இருக்கிறது. டெல்லியின் தட்பவெப்பமே தனி என்பதால், எந்தப் பக்கம் காற்றடிக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.