பருவமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: செந்தில் பாலாஜி நடத்திய ஆய்வு!

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், சட்டமன்ற பேரவையில் எரிசக்தித் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை குறித்து மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை காணொளி மூலம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி மின் வாரியத்தினுடைய உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடந்து முடிந்திருக்கின்றது. குறிப்பாக இந்த பருவ மழையை எதிர்கொள்ள கூடிய வகையில் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் செய்வதற்கான ஆய்வு கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டமும் நடந்த முடிந்திருக்கின்றன.

தற்போதைய நிலையைப் பொறுத்தவரை இந்த மழைக்காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, செபடம்பர் 1ஆம் தேதி மட்டும் ஒட்டுமொத்தமாக அதாவது 0 விலிருந்து ஒரு 30 நிமிடங்கள் வரை 90 இடங்களிலும் 30 நிமிடங்களுக்கு மேலாக 53 இடங்கள் ஆக மொத்தம் 143 இடங்களில் மழையால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு அதன் பிறகு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக மின் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து பெய்யக் கூடிய மழையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகத்திற்காக குறிப்பாக உதிரிபாகங்களை பொறுத்தவரைக்கும் ஏறத்தாழ 1,40,000 மின் கம்பங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. அதேபோல், மின்கம்பிகளை பொருத்தவரைக்கும் 9,500 கிலோ மீட்டர் மின்கம்பிகள் தயாராக இருக்கின்றன. இன்சுலேட்டர் பொருத்தவரைக்கும் 3 லட்சம் தயாராக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலைகளை மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டு சீரான மின் விநியோகத்திற்கான அனைத்து வழிவகைகளும் ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் திருவாரூர், சுசீந்திரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை இந்த திருக்கோயில்களைச் சுற்றி இருக்கக் கூடிய மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றுவதற்கு ஏறத்தாழ 22 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இப்போது டெண்டர் நிலைக்கு வந்திருக்கின்றன.

டெண்டர் முடிந்தவுடன் பணிகள் விரைவாக தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், மொத்தம் 316 புதிய துணை மின் நிலையங்கள் இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன. அதில், 242 துணை மின் நிலையங்களுக்கான இடங்கள் கண்டறியப்பட்டு மின்வாரியத்தினுடைய பெயருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அதில் 138 துணை மின் நிலையங்களுக்கான திட்ட மதிப்பீடுகள் முழுவதுமாக தயார் செய்யப்பட்டு ரூ.7,525 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இப்போது டெண்டர் நிலையில் இருக்கின்றன.

டெண்டர் முடிந்த பிறகு அந்த பணிகளை உடனடியாக தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல எற்கனவே, மின்வாரியத்தினுடைய காற்றாலையின் சொந்த உற்பத்தி என்பது 17 மெகாவாட் ஆக இருந்தது. அதில் சில காற்றாலைகள் இயங்க முடியாத சூழலில் இருக்கின்றன. காற்றாலைகள் நிறுவப்பட்டு பல வருடங்கள் ஆனபடியால் சட்டமன்றத்தில் புதிய காற்றாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 17 மெகாவாட் திறன் இருந்த இடங்களில் தற்போது 42 மெகாவாட் காற்றாலை மின் வாரியத்தின் மூலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அத்துடன் சேர்த்து சூரிய மின் உற்பத்தி நிலையமும் நிறுவுவதற்கு ஏறத்தாழ 63 மெகாவாட் HYBRID என மொத்தம் 105 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதற்கான விரிவான திட்ட அறிக்கை வரப்பெற்ற பிறகு, விரைவாக அதற்கான டெண்டர் விடப்பட்டு அந்த பணிகளும் தொடங்குவதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைப் பொருத்தவரைக்கும் சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அதில் 3,273 ஏக்கர் அரசு நிலங்கள் மின்வாரியத்திற்கு வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஒப்புதலை வழங்கி இருக்கின்றார்கள். 3,273 ஏக்கரும் ஆய்வு செய்யப்பட்டு அவ்விடத்தில் சூரிய மின் உற்பத்திக்கான பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டு அந்த இடங்களை மின் வாரியத்தின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், அந்த பணிகளை விரைவாக செய்து முடித்திட வேண்டும் என்றும் எடுத்துச் சொல்லப்பட்டிருகின்றன.

அதேபோல தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைப் பொறுத்தவரைக்கும் நிலக்கரியின் கையாளும் திறனை அதிகரிப்பதற்காக புதிதாக இரண்டு இயந்திரங்கள் நிறுவுவதற்கு 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அது வரக்கூடிய நவம்பர் மாதத்துக்குள் அந்தப் பணிகள் முடிக்கப்பட்டு விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக பணிகள் விரைவுப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஏற்கனவே, செயல்பட்டு கொண்டிருக்கின்ற, குறிப்பாக வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3ஐ பொருத்தவரைக்கும் 800 மெகாவாட் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் அந்த பணிகள் முடிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பணிகள் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. வருகின்ற டிசம்பர் மாதம் வடசென்னை அனல்மின் நிலையத்தினுடைய நிலை-3ன்னுடைய பணிகள் முடிக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்படும். அதற்கான பணிகளும் விரைவுப்படுத்தப் பட்டிருக்கின்றன.

சென்னையைப் பொறுத்தவரைக்கும் 5 டிவிசன்களில் யுஜி கேபிள் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. மீதம் இருக்ககூடிய 7 டிவிசன்களில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இறுதி நிலைக்கு வந்துள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விரைவில் தொடங்க இருக்கின்றன” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.