டெல்லி பறந்த மெசேஜ் – எடப்பாடி பழனிசாமி முடிவால் பாஜக அப்செட்!

ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை, அதிமுகவில் மீண்டும் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என, திட்டவட்டமாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டு, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத

தரப்பினர் திகைத்து நின்றனர். இந்தத் தீர்ப்பை எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், எங்கு சென்றாலும், வெற்றி தங்களுக்கு தான் என ஆரூடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீர்ப்பு வெளியானதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, “என்ன நடந்தாலும் பார்த்து கொள்ளலாம்; அதிமுகவில் இனி, ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு இடமில்லை; தேவையின்றி, அவர்களை பற்றி பேச வேண்டாம்” என, ஆதரவாளர்களிடம், எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; அவர்கள் (பாஜக) முரண்டு பிடித்தால், கழற்றி விட்டு விட்டு தேர்தலை தனியாக சந்திக்கலாம் என்றும் பேசப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததற்கு முக்கிய காரணம் பாஜகவுடனான கூட்டணியே என்று, ஒருசில நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாகவும், அதைத் தொடர்ந்தே, எடப்பாடி பழனிசாமி இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவு, பாஜக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.