சென்னை: தமிழ்த் திரையிசையில் ஏ.ஆர். ரஹ்மானின் வருகைக்குப் பின்னர் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
ஏராளமான புதிய பாடகர்களை அறிமுகப்படுத்திய ஏ.ஆர். ரஹ்மான், ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரையும் அடையாளப்படுத்தினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இருவருமே இளம் வயதிலேயே உயிரிழந்தது தமிழ்த் திரையிசைக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
புதிய குரல்களை அறிமுகப்படுத்திய ஏ.ஆர் ரஹ்மான்
‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஏஆர். ரஹ்மான், கடந்த 30 ஆண்டுகளாக இசையுலகையே ஆட்சி செய்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் தனது வெற்றிக் கொடியை பறக்கவிட்டு மாஸ் காட்டி வருகிறார். ரஹ்மானின் இசையில் இருக்கும் புதுமையைப் போலவே, அவரது பாடல்களைப் பாடும் பாடகர்களின் குரல்களும் வித்தியாசமானவை. ரோஜாவில் இருந்து இப்போது வரையிலும் புதிய பாடகர்களை அதிகமாக அறிமுகம் செய்தது ஏஆர் ரஹ்மான் தான்.
ஷாகுல் ஹமீது என்னும் ஆன்மாவின் ஈரம்
ஏஆர் ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் முன்னர், விளம்பரங்கள், பக்திப் பாடல்களுக்கு இசையமைத்து வந்தார். அப்போதிருந்தே அவருக்கு நண்பராக இருந்த ஷாகுல் ஹமீதுவை, ‘ஜென்டில்மேன்’ படத்தில் பாடகராக அறிமுகப்படுத்தினார் ஏஆர் ரஹ்மான். ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ என்ற பாடலில் ஒலித்த ஷாகுல் ஹமீதுவின் குரல், தமிழ் ரசிகர்களை கிறக்கத்தில் ஆழ்த்தியது.
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
சினிமாவில் முதல் பாடலிலேயே ரசிகர்களை மயக்கிய ஷாகுல் ஹமீது, ‘திருடா திருடா’ படத்தில் இடம்பெற்ற ‘ராசாத்தி என் உசுரு என்னதில்ல’ என்ற பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடல் தான் ஷாகுல் ஹமீதுவை கொண்டாட வைத்தது. அவரின் குரல் ஆன்மாவில் இருந்து உருகும் ஈரம் போல ரசிகர்களை உருக்கியது. இப்படி இன்னும் பல பாடல்களைப் பாடி முன்னணி பாடகராக வலம் வந்தார். ரஹ்மான் தவிர தேவா, சிற்பி போன்றோரின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
வித்தியாசமான மாயக் குரலோன் பம்பா பாக்யா
அதேபோல், சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்திய பாடகர்களில் பம்பா பாக்யாவும் முக்கியமானவர். ரஹ்மானின் குழுவில் ஒருவராக பாடிவந்த பம்பா பாக்யா, ராவணன் படத்தில் இடம்பெற்ற ‘கெடாக் கறி’ பாடலில் ஒரு பகுதியை பாடியிருந்தார். விஜய்யின் சர்கார் படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்’ பாடல் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அதேபோல் பிகில் படத்தில் வரும் ‘காலமே காலமே’ பாடலும் நல்ல அடையாளம் கொடுத்தது. சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலில் வரும் முதல் தொகையறாவைப் பாடியிருந்தார்.
இருவருமே இளம் வயதில் மரணம்
ஷாகுல் ஹமீது, பம்பா பாக்யா இருவருமே ஏஆர். ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமின்றி, அவருடனே தொடர்ந்து பயணித்து வந்தனர். அதனால் இருவரும் பெரிய பாடகர்களாக ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாகுல் ஷமீது, பம்பா பாக்யா இருவரும் இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவினர். ஷாகுல் ஹமீது 1998ல் நடந்த சாலை விபத்தில், தனது 45வது வயதில் உயிரிழந்தார். பம்பா பாக்யா நேற்று தனது 49வது வயதில் உயிரிழந்தார். இவர்கள் இருவரது மரணமும் தமிழ்த் திரையிசைக்கு மாபெரும் இழப்பு என ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.