அகமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரை அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அழகிய நடைபாதை மேம்பாலத்தில் பீடா எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி இருக்கின்றனர்.
பொதுவாகவே வட இந்தியர்கள் என்றால் பான் மசாலா போட்டுக்கொண்டு கண்ட இடத்தில் துப்பி வைப்பார்கள் என்ற பார்வை நாட்டு மக்களிடம் உள்ளது. அனைவரையும் இப்படி பொதுமைப்படுத்துவது தவறு என்ற வாதமும் உள்ளது.
ஆனால், இன்னும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்த பலர் பீடா, பான் மசாலா போன்றவற்றை போட்டு கண்ட இடத்தில் துப்புவதை விடவில்லை. சில மாதங்கள் முன்பாக விமானத்தில் பான் மசாலா துப்பப்பட்டு இருந்த புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டது.
அடல் பாலம்
இந்த நிலையில், கடந்த வாரம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆற்றில் எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே அடல் என்ற பெயரில் நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடல் மேம்பாலம் சபர்மதி ஆற்றின் இரு கரைகளை மட்டும் இணைப்பதோடு இன்றி, இந்த மேம்பாலத்தின் வடிவமைப்பும் பொறியியலில் தனித்து நிற்கிறது.
வாஜ்பாய்க்கு மரியாதை
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு குஜராத் அதிக அன்பை காட்டியது. கடந்த 1996 ஆம் ஆண்டு காந்திநகரில் அடல் பிகாரி வாஜ்பாய் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார். இந்த பகுதியில் அவருடைய பெயரில் பாலம் அமைத்து உள்ளது அவருக்கு நாம் கொடுத்து இருக்கும் மரியாதை.” என்றார்.
300 மீட்டர்
சபர்மதி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியை இணைக்கும் வகையில் 300 மீட்டர் தூரத்தில் கட்டப்பட்டு இருக்கும் இந்த பாலம் மேற்கு கரையில் இருக்கும் மலர் பூங்கா மற்றும் மைதானம் இடையே இருக்கும் பிளாசாவை கிழக்கு கரையில் இருக்கும் கண்காட்சி மையத்துடன் இணைக்கிறது.
அழகிய வடிவமைப்பு
அடல் பாலத்தின் மேற்கூரை வடிவமைப்பே தனித்துவமாக இருக்கிறது. பல வண்ணங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மேற்கூரை வண்ணமயமாக காட்சி தருகிறது. இதில் செல்லும் மக்களுக்கு நல்லதொரு காட்சியையும் அனுபவத்தையும் வழங்கும். குஜராத்தின் பிரபலமான பட்டம்விடும் திருவிழாவை கொண்ட பட்டத்தின் வடிவில் அதன் மேற்கூரைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
பீடா எச்சில்
இந்த பாலம் திறக்கப்பட்டதிலிருந்து பலரும் அதன் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதன் அழகிய வடிவமைப்பை குறிப்பிட்டு புகழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ஒரே வாரத்தில் அதன் அழகை சிதைக்கும் வேலையை செய்துள்ளனர் பீடா பிரியர்கள். அங்கு சென்ற சிலர் பீடா போட்டுவிட்டு பாலத்தில் மீது அழகுக்காக மேற்கூறைபோல் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ளை நிற கம்பி மீதும், சாலைகளிலும் பீடா எச்சிலை துப்பி இருக்கின்றனர். இந்த படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.