Ben Stokes: Phoenix from the Ashes: மனநலம் குறித்த ஓர் ஆரோக்கியமான உரையாடல்! ஆவணப்படம் சொல்வது என்ன?

கிறிஸ் க்ரப் மற்றும் லூக் மெல்லோஸ் இயக்கி சாம் மெண்டிஸின் (அமெரிக்கன் பியூட்டி மற்றும் பிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இயக்குநர்) நேர்காணலுடன் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது `Ben Stokes: Phoenix from the Ashes’. பென் ஸ்டோக்ஸின் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான மற்றும் கடின காலங்களின் தொகுப்புதான் இந்த ஆவணப்படம்.

கிரிக்கெட் பற்றி மட்டுமல்லாமல் அவர் வாழ்வில் நடந்த பல விஷயங்களையும் வெளிகொண்டுவந்துள்ளது இப்படம். கிரிக்கெட்டர்கள் அனைவரும் அதிகம் பணம் சம்பாதிக்கிறவர்கள், எனவே அவர்களின் வாழ்க்கை எந்தக் கஷ்டங்களும் இல்லாமல் நிம்மதியாக இருக்கும் என்பதே நம் மக்களிடம் அவர்களைப் பற்றி இருக்கும் பொதுவான கருத்து. ஆனால் இந்த ஆவணப்படத்தைப் பார்த்து முடிக்கையில் நம்முடையில் எண்ணத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

Ben Stokes

சமீபத்தில்தான், போட்டிகளில் தொடர்ந்து விளையாட மனதளவில் கடினமாக இருக்கிறது என்று சொல்லி ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஸ்டோக்ஸ். இவ்வளவு பெரிய வீரருக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள் என்ற கேள்விகள் அப்போது எழுந்தன. இப்படத்திற்கான ப்ரோமோவில் ‘நான் கிரிக்கெட்டை வெறுக்கத் தொடங்கிட்டேன்’ என்று ஸ்டோக்ஸ் கூறிய வார்த்தைகள் இது குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துவிட்டது.

ஆவணப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அவர் விளையாடிய போட்டிகளாக இருந்தாலும் ஒரு பக்கம் இதற்காக ஸ்டோக்ஸிடம் எடுக்கப்பட்ட நேர்காணலும் தொடர்ந்து கொண்டே வரும். மிகக் குறைந்த நேரமே என்றாலும் ஆவணப்படத்திற்காக எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் பிரமிப்பாக உள்ளன. சிறுவயதில் அவர் மேற்கொண்ட பயிற்சிகள், இளம் வயதில் அவரளித்த பேட்டிகளும் சேகரிக்கப்பட்டு இதில் இடம்பெற்றிருப்பது பார்ப்பவர்களுக்குப் படத்தோடு மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Ben Stokes

ஆவணப்படத்தைப் பகுதிகளாகப் பிரித்திருப்பது மிகப் பெரிய ப்ளஸ். அதில் அவரின் கஷ்ட காலங்களாக இரண்டு விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்று 2018-ம் ஆண்டு மதுபோதையில் ஒருவரைத் தாக்கி சட்டச் சிக்கலில் மாட்டியது. இன்னொன்று 2016-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக வீசிய அந்தக் கடைசி ஓவர். சிறந்த காலங்களாக வரும் இரண்டு விஷயங்கள், மக்கள் நன்கு அறிந்த போட்டிகள்தான். அதில் ஒன்று 2019-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லீயில் அவர் ஆடிய மகத்தான இன்னிங்ஸ். இன்னொன்று 2019 உலகக்கோப்பை வெற்றிக்கு அணியை வழிநடத்தியது.

இப்படி அவர் வாழ்வின் கஷ்ட காலங்கள் நம்மை மனதளவில் வேதனைப்பட வைத்தால், அவரின் சிறந்த காலங்கள் நமக்குச் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. சோகங்கள் நிறைந்த கரையோரத்திலிருந்து பெருமகிழ்ச்சி நிறைந்த கரைக்குப் பயணித்தது போல் ஓர் உணர்வு. நம்மைச் சுமந்து செல்லும் படகின் ஓட்டுநர் பென் ஸ்டோக்ஸ்!

கரையின் ஒரு பக்கத்தில் மகிழ்ச்சியை அனுபவித்துக் கொண்டிருந்த ஸ்டோக்ஸுக்கு காத்திருந்த இடிதான் கொரோனா காலத்தில் ஏற்பட்ட தந்தை ஜெரார்ட் ஸ்டோக்ஸின் மரணம். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸால் கொரோனா காரணமாக இறந்த தந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் போனது. 2019ல் தன் கரியரின் உயர்ந்த இடத்தில் ஸ்டோக்ஸ் இருந்ததைப் பார்த்து அதிகமாக சந்தோஷப்பட்ட மனிதர் என்றால் அது அவரின் தந்தைதான். அவரின் மரணம் ஸ்டோக்ஸின் மீது ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு சதம் அடித்து தன் தந்தைக்கு அர்ப்பணிப்பதே படத்தின் இறுதி காட்சி!

Ben Stokes

மனநலம் சார்ந்த விஷயங்களை மக்கள் தற்போது அதிக அளவில் பேசத்தொடங்கியுள்ளார்கள். கொரானா லாக்டௌன் அதற்கான முக்கிய காரணம். இப்படியான சூழலில் பென் ஸ்டோக்ஸ் போன்ற ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர், தன் ஆவணப்படத்தில் இது குறித்தான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது பாராட்டத்தக்க விஷயம்.

மனநல பாதிப்பிலிருந்து வெளியே வருவது தொடர்பான அறிவுரைகள் எதுவும் இதில் இல்லை. ஆனால் மனநல பாதிப்பின் முக்கியத்துவம் குறித்த எண்ணம் நமக்கு நிச்சயம் வரும்.

“Life throws so many things at you.

You’ve just got to try your best to overcome that.

There’s light on the other side!”

Ben Stokes

ஆவணப்படம் இந்த மூன்று வசனங்களுடன் முடியும். வாழ்வின் மீது நம்பிக்கை இழந்தவனுக்குக் கூட இவ்வாக்கியங்களால் நம்பிக்கை பிறக்கும். தலைப்பில் இருப்பது போல் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பின்னர் மீண்டும் உயிர்பெற்று உயரப் பறந்து கொண்டிருக்கும் ஃபீனிக்ஸ், அணியின் கேப்டனாக தன் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பறவையின் மீது தந்தையின் பார்வை எப்போதும் இருக்கும்.

வாழ்க்கைக்கும் விளையாட்டுக்கும் நிறையத் தொடர்புண்டு என்பதை இன்னும் ஆழமாகப் புரியவைக்கும் இந்த ஆவணப்படம், நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒன்று!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.