கோவை மாவட்டம், அன்னுார் அருகே செயல்பட்டு வரும் அமோ கோசாலையில் நடைபெற்ற கோ பூஜை நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அன்னூர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் “அமோ கோசாலை”-யை பார்வையிட்ட கால்நடை, பால்வளம், இணை அமைச்சர் எல்.முருகன், அங்குள்ள மாடுகளின் வகைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
”இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் நோக்கமாகும். அதன் படி இன்று, அன்னூர் பகுதியில் உள்ள கோசலையை பார்வையிட்டேன். மக்களுக்கு இயற்கையான உணவை தரவேண்டும் என்ற முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்கின்றார்கள். அந்த விவசாய பெருமக்களை சந்தித்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தேன்.
நாட்டு மாடுகள் வளர்ப்பதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது, இவ்வாறு மாடுகள் வளர்ப்பதை மேம்படுத்த மத்திய அரசு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, 5 ஏக்கர் நிலப்பரப்பில், 200 நாட்டு மாடுகள் வைத்து பண்ணை அமைத்து செயல்படுத்துவோருக்கு, இரண்டு கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
நாட்டு மாடு வளர்பவர்களின் பொருளாதரத்தை மேம்படுத்தும் விதமாக சோதனை அடிப்படையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் பசு சாணம் மற்றும் கோமியம் விலைக்கு வாங்கப்படுகிறது.
இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தொலைக்காட்சியில் வாரம் இரண்டு நாட்கள் விவசாயிகளுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும். தற்போது பொதுமக்களிடம், சிறுதானியங்கள் மற்றும் இயற்கை விளைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
நாட்டு மாடு வளர்க்கவும் மற்றும் பால் பண்ணைகள் அமைக்கவும் மத்திய அரசின் தேசிய பால் பண்ணை வளர்ச்சி வாரியம் ஊக்கமளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.